சொத்துக்குவிப்பு வழக்கில் ராஜபக்சே மகன் கைது!: முன்னாள் அதிபரிடமும் போலீஸ் விசாரணை
சொத்துக்குவிப்பு வழக்கில் ராஜபக்சே மகன் கைது!: முன்னாள் அதிபரிடமும் போலீஸ் விசாரணை
ADDED : ஜன 26, 2025 03:02 AM

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய மகன் யோஷிதா ராஜபக்சேவை, சொத்துக்குவிப்பு வழக்கில் போலீசார் நேற்று கைது செய்தனர். இதே வழக்கில், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம் அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு நவம்பரில் அதிபர் அனுரா குமார திசநாயகே தலைமையிலான புதிய ஆட்சி அமைந்தது. புதிய அரசு ஆட்சிக்கு வந்தபின், முன்னாள் அதிபர்கள் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் அரசில் நடந்த முறைகேடுகள், ஊழல்களை விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
இலங்கையில் 2015 வரை அதிபராக இருந்தவர் மகிந்த ராஜபக்சே. அதன்பின் 2019ல் அவரது இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே அதிபரானார்.
திண்டாட்டம்
அவரது ஆட்சியில் மகிந்த ராஜபக்சே பிரதமராக இருந்தார். இந்த சமயத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றால், இலங்கை பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. மக்கள் உணவுக்கு திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனால், நாடு முழுதும் போராட்டம் வெடித்தது. அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றினர். வேறு வழியில்லாமல் ராஜபக்சேவின் மொத்த குடும்பமும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பி ஓடியது.
இந்நிலையில் புதிதாக அதிபராகியுள்ள அனுரா குமார திசநாயகே, ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை பாதியாகக் குறைத்தார். அதிபர் உத்தரவின் அடிப்படையில் ராஜபக்சே குடும்பத்தினர் மீதான புகார்கள் அனைத்தையும் போலீசார் விசாரிக்கத் துவங்கியுள்ளனர்.
செல்வாக்கு
மகிந்த ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது, அவரது இரண்டாவது மகன் யோஷிதா ராஜபக்சே கடற்படை அதிகாரியாக பணியாற்றினார்.
அப்போது கொழும்பு புறநகர் பகுதியான ரத்மலானை என்ற இடத்தில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு மற்றும் இடத்தை, தன் தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி வாங்கியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக, யோஷிதாவுக்கு இலங்கை போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து போலீசார் அவரை தேடிவந்த நிலையில், பெலியத்த என்ற பகுதியில் நேற்று காலை காரில் சென்று கொண்டிருந்த அவரை தடுத்து நிறுத்தி அதிரடியாக கைது செய்தனர்.
பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யோஷிதா  ராஜபக்சேவிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோன்று கதிர்காமம் என்ற பகுதியில் சொகுசு வீடு வாங்கிய வழக்கில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம், கடந்த வாரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகனும், எம்.பி.,யுமான நமல் ராஜபக்சேவிடமும் மற்றொரு சொத்து வழக்கு தொடர்பாக போலீசார் விசாரித்துள்ளனர். இவர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

