இருந்தவரை போதும் ரணில்; இடத்தை காலி செய்யுங்க; இலங்கை மக்கள் கறார்!
இருந்தவரை போதும் ரணில்; இடத்தை காலி செய்யுங்க; இலங்கை மக்கள் கறார்!
UPDATED : செப் 22, 2024 07:33 PM
ADDED : செப் 22, 2024 10:35 AM

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெறும் 15 சதவீதம் ஓட்டுக்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.
நிதி நிலை
இலங்கை வரலாற்றின் பக்கங்களில் தவிர்க்க முடியாத அத்தியாயமாக இருப்பவர் ரணில் விக்ரமசிங்கே. 1977ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட ரணில், பல்வேறு துறைகளின் அமைச்சராகவும், அதிபராகவும், பிரதமராகவும் பதவி வகித்தவர்.
தொடர்ந்து 48 ஆண்டுகள் இலங்கை அரசியலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதிக்கம் செலுத்திய ரணிலுக்கு தன் அந்திமக்காலத்தில் இந்த அவமானகரமான தோல்வி அவசியமில்லை தான்.
ஆனால், பதவி ஆசை யாரை விட்டது? மீண்டும் தேர்தலில் நிற்க முடிவெடுத்தபோதே, பலருக்கும் தெரியும், இவருக்கு தோல்வி தான் கிடைக்கும் என்று; ரணில் நின்று பார்த்தார்; இலங்கை மக்கள் அவரிடம் கறாராக சொல்லி விட்டனர், 'இருந்தவரை போதும், நீங்கள் கிளம்புங்கள்' என்று.
நெருக்கடியில் வந்த பதவி
இலங்கையில் பொருளாதார நெருக்கடி எதிரொலியாக 2022ம் ஆண்டு மக்கள் வீதிகளில் குவிந்தனர். அரசுக்கு எதிரான போராட்டம் புரட்சியாக மாற, ராஜபக்சே குடும்பத்தினர் நாட்டைவிட்டே ஓட்டம் கண்டனர். விலைவாசி தாறுமாறாக உயர, நாட்டின் நிதிநிலை அதல பாதாளத்துக்கு போனது.
பொருளாதார நடவடிக்கைகள்
நாட்டை காக்க யாரும் இல்லை என்ற சூழலில் தான், அனுபவம் மிகுந்த அரசியல்வாதியாக, ஒற்றை எம்.பி.,யாக இருந்த ரணிலை தேடி வந்தது பதவி. இடைக்கால அதிபரானார். 2 ஆண்டுகளில் அந்நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு கைகொடுக்க, மெல்ல, மெல்ல மீண்டது.
பொருளாதாரத்தை தான் மீட்டதால், மக்கள் தனக்கு மறுவாழ்வு அளிப்பார்கள் என்று கருதி மீண்டும் தேர்தலில் நின்றார் ரணில். அவருக்கு கிடைத்தது என்னவோ வெறும் 15 சதவீதம் ஓட்டு மட்டும் தான்.
15 சதவீதம்
தேர்தலில் இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அனுர குமார திசநாயகே 42 சதவீதம் ஓட்டு பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார். அவர் வாங்கிய ஒட்டு மொத்த ஓட்டு சதவீதமே 15 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கிறது. கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் ஓட்டுகள் தான் ரணிலுக்கு விழுந்துள்ளன.
சுயேட்சை
ரணில் தோல்விக்கு முக்கிய காரணமே சுயேட்சையாக களம் இறங்கியதுதான் என்கின்றனர் அந்நாட்டு அரசியலை நன்கு அறிந்தவர்கள்.அவர்கள் மேலும் கூறியதாவது; இலங்கை அதிபர் தேர்தலில் கட்சியை விட்டுவிட்டு சுயேட்சையாக ரணில் போட்டியிட்டு உள்ளார். இன்னும் சொல்ல போனால் 40 ஆண்டுகாலமாக தமக்கு பிரதிநிதித்துவமாக இருந்த யானை சின்னத்தை கைவிட்டு சுயேட்சையாக களம் கண்டு இருக்கிறார். இத்தனைக்கும் அந்நாட்டின் பழமையான, முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக களம் காணாதது முதல் தவறு.
பலவீனம்
தொடக்கத்தில் தனித்து சுயேட்சையாக போட்டி என்ற அறிவிப்பு ரணிலுக்கு சாதகமாக பார்க்கப்பட்டது. அவரை சுற்றிலும் பல அரசியல் கட்சிகள் இருப்பது போன்று பார்க்கப்பட்டாலும் இந்த தேர்தலில் அவை மக்களால் ஏற்கனவே வேண்டாம் என்று தள்ளி வைக்கப்பட்ட கட்சிகள் தான். பலவீனமான அரசியல் கட்சிகளாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளன.
முழுபலன்
2 ஆண்டுகாலம் இலங்கையில் அவரின் பணி என்னவாக இருந்தது என்பதை மக்கள் நன்றாக அறிவர். எதிர்பாராத தருணத்தில் அதிபரானதால், அதன் பலனை முழுமையாக பெற வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கி தற்போது தோற்றுப் போய் இருக்கிறார். கட்சி சார்பில் போட்டியிட்டு இருந்தார் என்றால் ஓரளவு நிலைமையை அவரால் மாற்றியிருக்க முடியும்.
காரணம்
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பல முக்கிய தலைவர்களும் பிரிந்து சென்று சமகி ஜன பலவேகய என்ற புதிய கட்சியை உருவாக்கியதும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. சுயேட்சை என்பதால் பலகட்சி ஆதரவு என்ற பிம்பமும் உடைந்து, தோல்வியும் அடைந்துவிட்டார் என்கின்றனர், மக்கள்.
அங்கீகாரம்
ரணில் வென்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படாது, ஒன்றரை வருடங்கள் நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் எதுவுமே வேண்டாம், புதிய அதிபரின் கீழ், புதிய ஆட்சியே தீர்வு என்று மக்கள் கருதி அனுர குமார திசநாயகேவை அதிபராக அங்கீகரித்து விட்டனர் என்பதே இப்போதுள்ள நிலைமை.
மிஞ்சியது பெருமை மட்டுமே!
கடந்த 1999 மற்றும் 2005ம் ஆண்டு அதிபர் தேர்தல்களில் தோல்வியை தழுவியவர் ரணில். 2005 தேர்தலில் தமிழர்கள் ஓட்டளிக்காததால் ரணில் தோல்வியை தழுவினார். அவர் வென்றிருந்தால், இலங்கை அரசியலே தலைகீழாக மாறியிருக்கும் என்று கருதுவோர் பலர் உண்டு.
நெருக்கடி மிகுந்த காலத்தில் அதிபராக பதவிப் பொறுப்பேற்றுக்கொண்டு, நாட்டுப் பொருளாதாரத்தை மீட்டவர் என்ற பெருமை மட்டுமே கடைசியில் ரணிலுக்கு மிஞ்சியது. அந்த மகிழ்ச்சியில், தன் அந்திமக் காலத்தை நிம்மதியாக கழிப்பது தான் அவருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என்கின்றனர், அவரது எதிர்ப்பாளர்கள்.