அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்; கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவிப்பு
அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்; கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவிப்பு
UPDATED : அக் 25, 2025 07:45 AM
ADDED : அக் 25, 2025 07:43 AM

கோலாலம்பூர்; அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா வரிகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய வரிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கனடா ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தை வெளியிட்டது. அந்த வீடியோ விளம்பரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் வரிவிதிப்புகள் வர்த்தக போர்களை உருவாக்கலாம் என்று பேசியதாக காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இது ஒரு மோசடியான வீடியோ என்று ரீகன் அறக்கட்டளை தெளிவுப்படுத்தி விட, கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்தார். இந்நிலையில் அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த கனடா தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில் நிருபர்களிடம் பேசியதாவது;
கட்டுப்படுத்தக்கூடிய மற்றும் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை வேறுபடுத்தி பார்க்க வேண்டும். அவற்றின் முக்கியத்துவத்தை நாங்கள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளை நாம் கட்டுப்படுத்த முடியாது.
அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமாக விவாதங்களை நடத்த எங்கள் அதிகாரிகள் தயாராக உள்ளனர். அமெரிக்க தயாராக இருக்கும் போது அந்த பேச்சுவார்த்தையை கட்டியெழுப்ப நாங்களும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு மார்க் கார்னி கூறினார்.

