நீதிமன்றத்தில் சரணடைய தயார்: 'மாஜி' பிரதமர் ஹசீனா தகவல்
நீதிமன்றத்தில் சரணடைய தயார்: 'மாஜி' பிரதமர் ஹசீனா தகவல்
ADDED : ஜூலை 11, 2026 02:15 AM

டாக்கா: ''வரும் டிசம்பரில் என் கட்சி நிர்வாகிகளுடன் வங்கதேசம் திரும்ப உள்ளேன். நீதிமன்றத்தில் சரணடையவும் தயார்,'' என, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024 ஆகஸ்டில் வெடித்த மாணவர் போராட்டத்தால், அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, 78, தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இரு ஆண்டுகளாக இந்தியாவில் பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளார்.
அவரது ராஜினாமாவை தொடர்ந்து, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
'மாணவர் போராட்டத்தில், 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு ஷேக் ஹசீனாவே காரணம்' எனக்கூறி, வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த நவம்பரில் அவருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும், அவரது அவாமி லீக் கட்சிக்கும் தடை விதிக்கப்பட்டது. ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கும்படி இந்திய அரசுக்கு வங்கதேச அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த சூழலில், பிப்ரவரியில் நடந்த வங்கதேச பார்லி., தேர்தலில், மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி வென்று ஆட்சியை கைப்பற்றியது. அவரது மகன் தாரிக் ரஹ்மான் பிரதமரானார்.
இந்நிலையில், பிரபல தனியார் சேனல் ஒன்றுக்கு ஷேக் ஹசீனா அளித்த பேட்டி:
வங்கதேசத்தின் தற்போதைய சூழல் எனக்கு சாதகமாக இல்லை. அங்கு சென்றால் என் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதையும் அறிவேன். வரும் டிசம்பரில் அவாமி லீக் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் வங்கதேசம் சென்று, அங்குள்ள நீதிமன்றத்தில் சரணடைய போகிறேன். என் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் அரசியல் பழிவாங்கல் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்.
நான் வங்கதேசத்தில் கால் வைக்கும் போது, அவர்கள் என்னை கைது செய்யலாம் அல்லது சிறையில் அடைத்து கொலை கூட செய்யலாம்.
அதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். என் பெற்றோரும், குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்ட, அவர்களின் ரத்தம் சிந்தப்பட்ட இந்த மண்ணிலேயே என் மரணமும் நிகழட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
