பாலஸ்தீனத்துக்கு நிவாரண பொருட்கள்; 30 டன் மருந்து, உணவுப்பொருட்கள் அனுப்பியது இந்தியா
பாலஸ்தீனத்துக்கு நிவாரண பொருட்கள்; 30 டன் மருந்து, உணவுப்பொருட்கள் அனுப்பியது இந்தியா
UPDATED : அக் 22, 2024 07:39 PM
ADDED : அக் 22, 2024 11:03 AM

புதுடில்லி: பாலஸ்தீன மக்களுக்கு 30 டன் மருந்து மற்றும் உணவுப்பொருட்களை இந்தியா அனுப்பியது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்தாண்டு அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. அது, ஓராண்டை எட்டியுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
போரில் பாதிக்கப்படும் லெபனானுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் 11 டன் மருந்து பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு 30 டன் மருந்து மற்றும் உணவுப்பொருட்களை அனுப்பியது. இந்நிலையில், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பி உள்ளது.
30 டன் மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய முதல் தவணை உதவி இன்று புறப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை பொருட்கள், பல்பொருட்கள், பொது மருத்துவ பொருட்கள் மற்றும் பிஸ்கட்கள் ஆகியவை அடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.