பிரபலங்களின் கல்லறைக்கு பக்கத்தில் இடம்பெற பாரிசில் முன்பதிவு வசதி
பிரபலங்களின் கல்லறைக்கு பக்கத்தில் இடம்பெற பாரிசில் முன்பதிவு வசதி
ADDED : நவ 07, 2025 12:48 AM
பாரிஸ்: பிரபலமானவர்களின் கல்லறை உள்ள பகுதிகளில், கல்லறை கட்டுவதற்கான இடங்களை பெற பாரிஸ் வாழ் மக்களுக்கு அந்நகர நிர்வாகம் ஒரு லாட்டரி திட்டத்தை அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகர எல்லைக்குள் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடப்பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது.
இதையடுத்து, வரலாற்று பிரபலமானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள கல்லறை பகுதிகளில், பல ஆண்டுகள் பராமரிப்பின்றி சிதலமடைந்து உள்ள கல்லறைகளை, பாரிஸ் நகர மக்களுக்கு ஒதுக்க பாரிஸ் நகர நிர்வாகம் முடிவு செய்து அதற்காக ஒரு லாட்டரி திட்டத்தை அறிவித்துள்ளது.
மூன்று புகழ்பெற்ற கல்லறை பகுதிகளான 'பெரே - லாசேஸ், மான்ட்பார்னாஸ், மான்ட்மார்ட்' ஆகியவற்றில் தலா 10 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.
குலுக்கலில் வெற்றி பெற்றவர், 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பராமரிப்பின்றி கைவிடப்பட்ட 30 கல்லறை கட்டமைப்புகளில் ஒன்றை பணம் கொடுத்து வாங்க முடியும்.
அதை சொந்த செலவில் ஆறு மாதங்களுக்குள் முழுமையாக புதுப்பிக்க வேண்டும். புதுப்பித்தலுக்கு பின், புதைக்கும் இடத்துக்கான சலுகையை, அதாவது குத்தகைக்கு எடுக்கும் உரிமையை வாங்க வேண்டும்.
இவ்வாறு உரிமை பெற்றவர் மறைவுக்குப் பின், அவருடைய உடல் அந்த இடத்தில் புதைக்கப்படும்.
பிரான்ஸ் சட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பராமரிப்பு இல்லாமல் முற்றிலும் சிதைந்து போன கல்லறை கட்டமைப்புகளை நகர நிர்வாகம் திரும்ப எடுத்துக் கொள்ள முடியும். அக்கல்லறையில் உள்ள மனித எச்சங்களை கல்லறை கிடங்குக்கு மாற்றி, புதைக்கும் இடம் மீண்டும் விற்பனைக்கு வரும்.

