இம்ரான் கட்சி பேரணியில் கலவரம்; போலீஸ்காரர் பலி; 70 பேர் காயம்
இம்ரான் கட்சி பேரணியில் கலவரம்; போலீஸ்காரர் பலி; 70 பேர் காயம்
ADDED : நவ 26, 2024 02:07 AM

லாகூர்: நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி, அவரது கட்சியினர் நடத்திய பேரணியின்போது, போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கலவரத்தில், ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார்.
மேலும், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சில போலீசார் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
தண்டனை
பாகிஸ்தானில், பிரதமராக இருந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கான், 72, கடந்த 2022ல் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்து பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது, 200க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இதில் தண்டனை பெற்று, கடந்தாண்டு ஆகஸ்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி, அவருடைய, பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சி சார்பில் பெரிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அவருடைய கட்சி மிகவும் வலுவாக உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் இருந்து, கட்சித் தொண்டர்கள் பேரணியாக புறப்பட்டனர்.
அதை முறியடிக்க, சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அவற்றை அகற்றி, கட்சித் தொண்டர்கள் பேரணியை தொடர்ந்தனர். நேற்று காலையில், இஸ்லாமாபாதுக்குள் நுழைவதற்கு முன் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
வன்முறை
பஞ்சாப் மாகாண எல்லையில், பேரணியில் வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக மாறியது. இதில், ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். மேலும், 70 போலீசார் காயமடைந்தனர்.
இதைத் தவிர, சில போலீசாரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. பேரணியில் சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கட்சித் தொண்டர்கள் பலர் காயமடைந்ததாக, பி.டி.ஐ., தெரிவித்துள்ளது.