ஒவ்வொரு வாரமும் 36 மணி நேரம் விரதம் இருக்கும் ரிஷி சுனக்: காரணம் என்ன?
ஒவ்வொரு வாரமும் 36 மணி நேரம் விரதம் இருக்கும் ரிஷி சுனக்: காரணம் என்ன?
ADDED : ஜன 31, 2024 05:42 PM

லண்டன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஒவ்வொரு வாரத்தின் துவக்கத்திலும் 36 மணி நேரம் விரதம் மேற்கொண்டு வருகிறார்.
ஞாயிறு மாலை 5:00 மணி முதல் செவ்வாய் மாலை 5:00 மணி வரை, தண்ணீர், தேநீர் மற்றும் பிளாக் காபி தவிர வேறு எதையும் அவர் சாப்பிடுவது கிடையாது. இதற்கு அவர், ‛‛ சமச்சீரான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக நான் கடைபிடிக்கும் ஒரு முக்கியமான வழக்கம்'' என விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ரிஷி சுனக் மேலும் கூறியதாவது: சீரான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாரத்தின் துவக்கத்திலும் விரதம் இருக்க நான் முயற்சி செய்கிறேன். ஆனால், எல்லோரும் இதனை வேறு மாதிரியாக செய்வார்கள். எனக்கு இனிப்பு மிகவும் பிடித்தமானது. இதன் மூலம் விரதம் இருந்த நாட்களைத் தவிர பிற நாட்களில் எனக்கு விருப்பம் போல் சாப்பிட முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ரிஷி சுனக்கிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் விரதம் இருப்பது உண்மைதான். அவர் திங்கட்கிழமைகளில் எதையும் சாப்பிடுவதில்லை. அவரது வாழ்க்கை மற்றும் வேலையின் அனைத்து அம்சங்களிலும் அவர் காட்டும் ஒழுக்கம், கவனம், உறுதிப்பாட்டிற்கு இது ஒரு உண்மையான சான்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மெக்சிகன் கோக் தனக்கு பிடித்தமான பானம் எனக்கூறிய ரிஷி சுனக் அதற்கான விளக்கத்தையும் அளித்து இருந்தார். அதில், நான் சர்க்கரை பொருட்களை விரும்புகிறேன். நிறைய இனிப்பு சார்ந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை விரும்பி சாப்பிடுவேன். எனது உணவை நான் விரும்புகிறேன். வேலையின் காரணமாக முன்பு போல் உடற்பயிற்சி செய்வதில்லை. எனவே, வாரத்தின் துவக்கத்தின் என்னை சீரமைத்து கொள்கிறேன் எனக்கூறியிருந்தார்.