ரஷ்யா - உக்ரைன் போருக்கு தீர்வு? சவுதி அரேபியாவில் முக்கிய பேச்சு!
ரஷ்யா - உக்ரைன் போருக்கு தீர்வு? சவுதி அரேபியாவில் முக்கிய பேச்சு!
ADDED : பிப் 18, 2025 01:40 AM

துபாய்,:ரஷ்யா - உக்ரைன் இடையே நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ரஷ்ய அதிபர் புடினும், அமெரிக்க அதிபர் டிரம்பும், சவுதி அரேபியாவில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் நடந்து வருகிறது.
இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சு நடத்தி, போரை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் இன்று பேச்சு நடத்தவுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, டிரம்பும், புடினும் நேரடியாக பேச்சு நடத்தி, போர் நிறுத்தம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இந்த சந்திப்பு சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தன் மனைவியுடன் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வந்துள்ளார். நாளை அவர், சவுதி அரேபியா வந்து, போர் நிறுத்தம் குறித்து பேசவுள்ளதாகவும் தகவல் பரவியது.
இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில், 'டிரம்ப், புடின் சந்திப்பு குறித்து எங்களுக்கு இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை' என்றனர்.

