ஈரான் மீதான தடையை தாமதமாக்கும் ரஷ்யா, சீனா முயற்சிகள் தோல்வி
ஈரான் மீதான தடையை தாமதமாக்கும் ரஷ்யா, சீனா முயற்சிகள் தோல்வி
ADDED : செப் 28, 2025 03:09 AM
டெஹ்ரான்:ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதிப்பதை மேலும் ஆறு மாதம் தாமதப்படுத்த ரஷ்யா, சீனா எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது.
மேற்காசிய நாடான ஈரான், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை தடுக்கும் நோக்கில், 2015ல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்பந்தம் செய்தன. பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.
தீர்மானம் இதையடுத்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இந்தத் தடையை நீக்குவது தொடர்பாக பல கட்ட பேச்சு நடந்தன. ஆனால், இதில் முடிவு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கான 'ஸ்னாப்பேக்' திட்ட செயல்முறைகளை துவக்கின.
இந்த செயல்முறையின் படி, பொருளாதார தடைகள் 30 நாட்களுக்குள் மீண்டும் அமலுக்கு வரும்.
இதையடுத்து, ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பதா அல்லது நிரந்தரமாக தடைகளை நீக்குவதா என்பது குறித்த வரைவு தீர்மானம் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் வைக்கப்பட்டது. 15 நாடுகளைக் கொண்ட இந்த கவுன்சிலில், ரஷ்யா, சீனா ஆதரவுடன் இதற்கான வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ரஷ்யா, சீனா, பாக்., மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக ஓட்டளித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்தன. இரண்டு நாடுகள் வாக்களிக்கவில்லை. இதனால் அந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
இதனால், ஈரானின் வெளிநாட்டு சொத்துகள் முடக்கப்படும்; ஈரானால் எந்த நாட்டுடனும் ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது. மேலும் ஈரான், ஏவுகணை சோதனை மேற் கொண்டால் தண்டனை விதிக்கப்படும்.
அணு ஆயுதம் ஐ.நா., தடைகள் மீண்டும் கொண்டுவரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான் அதிபர் மசூத் பெஷஸ்கியன், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை விரும்பவில்லை. எங்களிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்து வெளிப்படையாக இருக்க நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம், என்று கூறினார்.
இதற்கிடையே, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் உள்ள தன் துாதர்களை ஈரான் திரும்ப அழைத்துக் கொண்டது.