ADDED : டிச 02, 2025 08:38 PM

மாஸ்கோ: ரஷ்யா மீதான இந்தியாவின் நட்பு உறவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, புடின் வரும் டிசம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் நம் நாட்டிற்கு வருகை தருகிறார். அவர் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்த இருக்கிறார். இது தொடர்பாக, ரஷ்யாவின் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ கூறியதாவது: ரஷ்யா மீதான இந்தியாவின் நட்பு உறவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் உறவு மிகவும் முக்கியமானது. இந்திய நண்பர்களின் வரலாற்று வளர்ச்சியின் போது அவர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நின்றதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இன்றைய காலகட்டத்தில் மிகவும் நட்புரீதியான நிலைப்பாட்டிற்கு, நாங்கள் இந்தியாவுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
மூன்றாம் நாடுகளால் பாதிக்கப்படாத வகையில் இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது இந்தியாவிற்கு, ரஷ்யாவிற்கு மிகவும் முக்கியமானது. உக்ரைன் மோதல் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். பிரதமர் மோடியின் நிலைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம்.
நாங்கள் இந்தியாவிலிருந்து வாங்குவதை விட, அதிகமாக விற்பனை செய்கிறோம். எங்கள் இந்திய நண்பர்கள் அதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். சொல்லப் போனால், இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு இறக்குமதியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். நாங்கள் இந்தியாவிலிருந்து அதிகமாக வாங்க விரும்புகிறோம். இவ்வாறு டிமிட்ரி பெஸ்கோ கூறினார்.

