போரை நிறுத்த புடினுடன் டிரம்ப் பேச்சு 'கட்டுக்கதை' என ரஷ்யா அரசு மறுப்பு
போரை நிறுத்த புடினுடன் டிரம்ப் பேச்சு 'கட்டுக்கதை' என ரஷ்யா அரசு மறுப்பு
ADDED : நவ 12, 2024 12:49 AM

மாஸ்கோ, அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசியதாகவும், உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின; ஆனால், 'இது பொய் தகவல், கட்டுக்கதை' என, ரஷ்யா கூறியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போர், இரண்டு ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தற்போது தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
பிரசாரத்தின்போது, 'பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்' என, டிரம்ப் கூறியிருந்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பின், 'போர்களை உருவாக்க மாட்டேன்; நிறுத்துவேன்' என்று கூறியிருந்தார்.
அதிபர் தேர்தலில் வென்ற டிரம்புக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுவரை, 70 நாடுகளின் தலைவர்கள் டிரம்பை தொடர்பு கொண்டு பேசியதாக, அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புடினுடன், டிரம்ப் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது, உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியதாகவும், அமெரிக்க ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.
ஐரோப்பாவில் அமெரிக்கப் படைகள் கணிசமாக உள்ளதை அவர் சுட்டிக் காட்டியதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதை ரஷ்யா மறுத்துள்ளது. ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் நேற்று கூறியதாவது:
அமெரிக்க ஊடகங்களில் வெளியானதுபோல், டிரம்ப் - புடின் இடையே எந்த பேச்சும் நடக்கவில்லை. இது முற்றிலும் பொய்யான தகவல் மற்றும் முழுக்க முழுக்க கட்டுக்கதை.
இதில் இருந்து, நம்பிக்கைக்குரிய பிரபலமான பத்திரிகைகள் வெளியிடும் தகவல்களின் தரம் வெளிப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில், இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சு நடக்குமா என்பது குறித்து, தற்போதைக்கு எதுவும் கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.