தீவிரமடைந்த ரஷ்யா - உக்ரைன் போர்; கீவ் நகரில் அமெரிக்க தூதரகம் மூடல்
தீவிரமடைந்த ரஷ்யா - உக்ரைன் போர்; கீவ் நகரில் அமெரிக்க தூதரகம் மூடல்
ADDED : நவ 20, 2024 03:25 PM

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் அணிகளுக்கு இடையிலான போர் 1,000வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போரில் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் வலுவாக சண்டையிடுவதற்கு காரணமே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ஆயுத உதவிகளை வழங்கி வருவது தான். ரஷ்யாவுடன் வடகொரிய படைகளும் இணைந்து தாக்க இருப்பதாகவும், இதனால், தொலைதூரத்தில் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்து வந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவிற்குள் தொலைதூரத்திற்கு சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதியளிப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். இதனால், கடுப்பான ரஷ்ய அதிபர், ரஷ்ய படைகள் அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி கொடுத்தார். இதனால், போர் தீவிரமடைந்துள்ளது.
எந்த நேரமும் உக்ரைனில் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும், உக்ரைன் வாழ் அமெரிக்கர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.