ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தினால் சர்வதேச விலை 120 டாலராக அதிகரிக்கும்!
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தினால் சர்வதேச விலை 120 டாலராக அதிகரிக்கும்!
UPDATED : ஆக 08, 2025 12:36 PM
ADDED : ஆக 08, 2025 10:01 AM

லண்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவது போல், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் என்ன ஆகும்? சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலர் வரை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவுகளை எடுக்கக் கூடியவர். உக்ரைன் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்கிறார் அவர். அவர் கூறுவது போல் இந்தியா செய்தால் என்ன ஆகும்? இந்தியா, உலகின் பிற நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் சர்வதேச சந்தையில் விலை அதிகரிக்கும்.
இன்றைய நிலவரப்படி ஒரு பீப்பாய் 64 டாலர் என்ற அளவில் கச்சா எண்ணெய் விலை இருக்கிறது. ரஷ்யவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா முற்றிலும் நிறுத்தினால், சர்வதேச சந்தையில் பீப்பாய் 120 டாலராக விலை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
ஒட்டு மொத்த உலக நாடுகளும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் பட்சத்தில், சர்வதேச சந்தையில் பீப்பாய் 200 டாலராகவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இப்படி நடந்தால் உலகம் முழுவதும் விலைவாசி தாறுமாறாக உயர்ந்து விடும்.
இதன் மூலம், அமெரிக்க மக்கள் முதல் சர்வதேச அரசியலுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஏழை நாடுகளை சேர்ந்தவர் வரை எல்லோரும் பாதிக்கப்படுவர் என்பதுதான் உண்மை நிலவரம்.
நடந்தது என்ன?
ரஷ்யா, உலகின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு. இன்று வரை அந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணையை வாங்க, ஐநா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எதுவும் தடை விதிக்கவில்லை.
சர்வதேச விலையைக் காட்டிலும் ஐந்து சதவீதம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.
அந்த விதியை பின்பற்றி இந்தியா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்னதாக, ரஷ்யாவிடம் இந்தியா பெரிய அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யவில்லை.
உக்ரைன் விவகாரத்தில், ரஷ்யா கச்சா எண்ணெய் தடை செய்யப்படும் சூழல் இருந்த காரணத்தால் அப்போது விலை ஒரு பீப்பாய் 137 டாலராக அதிகரித்தது. இது சர்வதேச அளவில் விலைவாசி உயர்வு அச்சத்தை ஏற்படுத்தியது. மேற்கத்திய நாடுகளே, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளும்படி இந்தியாவிடம் தெரிவித்தனர். அமெரிக்காவும் அதையே கூறியது.
அதன் காரணமாக, ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்ய ஆரம்பித்தது. இப்போதைய நிலவரப்படி, இந்திய கச்சா எண்ணெய் கொள்முதலில் 36 சதவீதம் வரை ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.இதன் மூலம் சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரிப்பதும், விலைவாசி தாறுமாறாக உயர்வதும் தவிர்க்கப்பட்டது. இந்தியாவின் முடிவை பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பாராட்டினர்.
தடைகளை மதிக்கும் நாடு!
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு முன்னதாக, ஈரானிடம் இருந்து இந்தியா அதிகப்படியான கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வந்தது. 2007ல், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈரான் 12% க்கும் அதிகமாக இருந்தது.
ஆனால் ஈரான் மீது அமெரிக்காவும், சர்வதேச அமைப்புகளும் பல்வேறு தடைகளை விதித்த காரணத்தால் கடந்த பத்தாண்டுகளில், ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா முற்றிலும் நிறுத்திவிட்டது.
ஆனால் ஈரானிய கச்சா எண்ணெயை யார் வாங்குகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகும் சீனா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
அதை அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டுகொள்வதில்லை. சீனா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவும் அவரால் முடியாது.
தற்போதைய நிலவரம்
இன்று வரை ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஏன் தடை விதிக்கவில்லை? அப்படி தடை விதித்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும். எனவே அத்தகைய தடை விதிப்பதற்கு அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளே கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் சர்வதேச அளவில் விலைவாசியும் தாறுமாறாக உயர்ந்து விடும். டிரம்ப் மீதான அமெரிக்க மக்களின் அதிருப்தி பன்மடங்கு அதிகரித்து விடும். இந்த அச்சம் காரணமாகவே டிரம்ப் இன்னும் ரஷ்ய கச்சா எண்ணைக்கு தடை விதிக்காமல் இருக்கிறார். இந்தியாவை மட்டும் வரியும் வரிக்கு அபராதமும் விதித்து மிரட்டி பார்க்கிறார். அவரது மிரட்டலை பொருட்படுத்தாத மத்திய அரசு, நாட்டு நலன் கருதி தேவையான முடிவுகளை எடுப்போம் என்று உறுதியாக தெரிவித்துவிட்டது.
தம் நாட்டு மக்கள் நலன் கருதி, இந்திய அரசு எடுத்துள்ள முடிவு சரியானது என்கின்றனர் சர்வதேச தொழில்துறையினர். ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம், உரம் போன்றவற்றை கொள்முதல் செய்யும் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடுகளையும் மத்திய அரசு கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.