ரஷ்ய பார்லி., தேர்தல்: புடின் மேஜிக்கால் ஆளும் கட்சி முன்னிலை
ரஷ்ய பார்லி., தேர்தல்: புடின் மேஜிக்கால் ஆளும் கட்சி முன்னிலை
ADDED : செப் 21, 2026 06:31 AM

மாஸ்கோ: உக்ரைன் போருக்கு மத்தியில் நடைபெற்ற ரஷ்ய பார்லிமென்ட் (ஸ்டேட் டூமா) தேர்தலில், அதிபர் விளாடிமிர் புடினின் ஆளும் 'யுனைடெட் ரஷ்யா' கட்சி 57.5 சதவீத வாக்குகளைப் பெற்று பெரும் முன்னிலை வகிக்கிறது.
ரஷ்ய பார்லிமென்டின் கீழ் அவையான 'ஸ்டேட் டூமா'வுக்கு மூன்று நாட்கள் நடைபெற்ற தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ள நிலையில், ரஷ்ய தேர்தல் கமிஷன் வெளியிட்ட நிலவரப்படி, அதிபர் விளாடிமிர் புடினின் 'யுனைடெட் ரஷ்யா' கட்சி 57.5 சதவீத வாக்குகளை பெற்று அசுர பலத்துடன் முதலிடத்தில் உள்ளது. இறுதி முடிவுகள் செப்டம்பர் 25க்குள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போருக்கு ஆதரவு:
கடந்த 2022ல் உக்ரைன் மீதான முழு அளவிலான ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு நடைபெறும் முதல் பார்லிமென்ட் தேர்தல் இதுவாகும். இந்தத் தேர்தல் குறித்து அதிபர் புடின் கூறுகையில், 'இத்தேர்தல் நமது ராணுவ வீரர்களுக்கு மக்கள் தரும் ஆதரவையும், நாட்டின் ஒற்றுமையையும் உலகிற்கு பறைசாற்றும்' என குறிப்பிட்டிருந்தார்.
எதிர்க்கட்சிகள் முடக்கம்:
இந்தத் தேர்தலில் ஆளும்கட்சிக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தக்கூடிய வலுவான எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்படவில்லை. உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஒரே பதிவு செய்யப்பட்ட கட்சியான 'யாப்லோகோ'கட்சியின் வேட்புமனுவை ரஷ்ய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021 தேர்தலின்போது, மொத்தமுள்ள 450 இடங்களில் 324 இடங்களை புடினின் கட்சி கைப்பற்றியிருந்தது. தற்போது உக்ரைனின் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும், புடின் கட்சி மீண்டும் பார்லிமென்டில் தனது முழு பலத்தை நிலைநாட்டி ஆட்சியைத் தக்கவைக்கும் பாதையில் நடைபோடுகிறது.
சர்ச்சை வாக்குப்பதிவு:
உக்ரைன் போருக்குப் பின் ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்ட நான்கு பகுதிகள் மற்றும் 2014-ல் இணைக்கப்பட்ட கிரீமியா ஆகிய பகுதிகளிலும் இந்தத் தேர்தல் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இதற்கு உக்ரைன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இது சட்டவிரோதமானது என்று ஐரோப்பிய ஒன்றியமும் சாடியுள்ளது.
