ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கியது: ரஷ்யாவில் 49 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கியது: ரஷ்யாவில் 49 பேர் உயிரிழப்பு
UPDATED : ஜூலை 24, 2025 02:21 PM
ADDED : ஜூலை 24, 2025 12:20 PM

மாஸ்கோ: ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 49 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் துாரக்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமுர் மாகாணத்தில், அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.என்.24 ரக விமானம் சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 40 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் பயணித்துள்ளனர்.
டிண்டா விமான நிலையம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. விமானத்தை தேடி வரும் மீட்பு படையினர், விமானம் விழுந்து நொறுங்கியதை உறுதி செய்தனர்.
உயிர் பிழைக்க வாய்ப்பில்லை
டிண்டா விமான நிலைய இயக்குநர் கூறியதாவது: எம்.ஐ.8 ஹெலிகாப்டர் தேடுதல் பணியில் ஈடுபட்டு இருந்தது. விழுந்து நொறுங்கி தீ பற்றிய விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டறிந்தனர்.
விமான பயணிகள் யாரும் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதை உறுதி செய்தனர். விமான விழுந்து நொறுங்கிய இடம் மலை பகுதி என்பதால், அங்கு மீட்பு ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அமுர் மாகாண கவர்னர் வாசிலி ஆர்லோ கூறியதாவது: விழுந்து நொறுங்கிய விமானத்தில் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 49 பேர் பயணித்துள்ளனர். விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. மீட்பு பணிகள் நடந்து வருகிறது, என்றார்.