துபாயில் உயிரிழந்த தேஜஸ் விமானிக்கு ரஷ்யா, அமெரிக்கா விமானப்படை அஞ்சலி
துபாயில் உயிரிழந்த தேஜஸ் விமானிக்கு ரஷ்யா, அமெரிக்கா விமானப்படை அஞ்சலி
UPDATED : நவ 23, 2025 08:17 PM
ADDED : நவ 23, 2025 08:08 PM

புதுடில்லி: துபாய் விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த இந்திய விமானப்படை வீரர் நமன்ஸ் சியாலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ரஷ்ய விமானப்படை குழுவினர், 'மிஸ்சிங் மேன் பார்மேஷன்' ஏற்படுத்தினர். அமெரிக்க விமானப்படை குழுவினரும் தங்களது நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.
துபாயில் விமான கண்காட்சி நடைபெற்றது. இதில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் தயாரித்த இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் பங்கேற்றது. வானில் சாகச நிகழ்வுக்காக தேஜஸ் விமானம் பறந்து கொண்டு இருந்தது. அப்போது விபத்துக்குள்ளான விமானம் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஹிமாச்சல பிரதேசம் காங்ரா மாவட்டத்தை சேர்ந்த விமானி விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார். இதற்கு விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், துபாய் கண்காட்சியில் இந்திய விமானப்படை வீரரை ரஷ்ய விமானப்படை குழுவினர்அஞ்சலி செலுத்தும் வகையில், 'மிஸ்சிங் மேன் பார்மேஷன்' ஏற்படுத்தினர்.
இது குறித்த வீடியோவை பகிர்ந்துள்ள ரஷ்யா விமானப்படையின் 'Russian Aerobatic ' குழுவினர்,
'தன்னுடைய கடைசி பயணத்தில் இருந்து திரும்ப வராத சகோதரரின் நினைவாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது' எனத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சாகசம் நிகழ்ச்சி ரத்து
நமன்ஸ் சியால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், துபாய் கண்காட்சியில் நடைபெற இருந்த அமெரிக்க விமானப்படையினரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு இரங்கல் தெரிவித்து, சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
நமன்ஸ் சியோலுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: 'விங் கமாண்டர்' நமன்ஷ் சியால் அவர்களுக்கு வீரவணக்கம்!
அவரது உடல் கோவைக்குக் கொண்டு வரப்பட்ட காட்சிகளைக் கண்டு கலங்கினேன். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் பணிபுரிந்த அவருக்குத் தமிழகம் தனது அஞ்சலியைச் செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்தப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

