இந்தியா-ரஷ்யா உறவுகள் உலக நலனுக்கு முக்கியம்: ஜெய்சங்கர் உறுதி
இந்தியா-ரஷ்யா உறவுகள் உலக நலனுக்கு முக்கியம்: ஜெய்சங்கர் உறுதி
ADDED : நவ 18, 2025 12:05 PM

மாஸ்கோ: இந்தியா-ரஷ்யா உறவுகள் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் பங்கேற்க ஜெய்சங்கர் ரஷ்யா சென்று இருக்கிறார். அவர் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவை சந்தித்தார்.
சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. அப்போது, ஜெய்சங்கர் பேசியதாவது: இந்தியா-ரஷ்யா உறவுகள் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது.
இந்தியா-ரஷ்யா உறவுகள் நீண்ட காலமாகச் சர்வதேச உறவுகளில் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கிறது. உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல் உள்ளிட்டவை குறித்த கருத்துக்களை கூட்டத்தில் பரிமாறிக் கொள்வோம்.
அமைதியை நிலைநாட்டுவதற்கான ரஷ்யாவின் சமீபத்திய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது. மோதலை முடிவுக்கு கொண்டு வருவதும், அமைதியை உறுதி செய்வதும், சர்வதேச சமூகத்தின் நலனுக்காக ஆகும். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

