சவுதி - யு.ஏ.இ., இடையே மீண்டும் நட்புறவு புதுப்பிப்பு
சவுதி - யு.ஏ.இ., இடையே மீண்டும் நட்புறவு புதுப்பிப்பு
UPDATED : ஜூலை 23, 2026 07:52 PM
ADDED : ஜூலை 23, 2026 07:32 PM

துபாய்:மேற்காசிய நாடுகளான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போதும் நட்புறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரில் அந்நாட்டு அரசுக்கு சவுதி அரேபியாவும், தெற்கு ஏமனை பிரிக்க கோரும் தெற்கு இடைக்கால கவுன்சில் என்ற பிரிவினைவாத அமைப்புக்கு, யு.ஏ.இ.,யும் ஆதரவளித்தன.
இந்த விவகாரத்தால், யு.ஏ.இ., மற்றும் சவுதி அரேபியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது மட்டுமின்றி சூடான் உள்நாட்டு போர், கச்சா எண்ணெய் உற்பத்தி, ஈரான் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளிலும் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இந்நிலையில், சவுதி ராணுவ அமைச்சர் காலித் பின் சல்மானும், எமிரேட்சின் துணை அதிபர் மன்சூர் பின் சயீதும் ஒருவரையொருவர் கட்டியணைத்து சிரித்தபடி நிற்கும் புகைப்படத்தை, சவுதி மூத்த அதிகாரியான துர்கி அல் - ஷேக் தன் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
'சவுதி அரேபியா - யு.ஏ.இ., சகோதரத்துவ உறவுகள் மற்றும் வலுவான கூட்டாண்மையின் வெளிப்பாடு' என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இப்பதிவை மறுபகிர்வு செய்த எமிரேட்ஸ் அதிபரின் ஆலோசகரான அன்வர் கர்காஷ், 'வளைகுடா பிராந்தியத்தின் மிகப்பெரிய கூட்டாண்மை ஒரே புகைப்படத்தில் அடங்கியுள்ளது, ஒற்றுமையே வலிமை' என்று பதிவிட்டிருந்தார்.
இது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் நட்புறவு துளிர் விடுவதை காட்டும் விதமாக அமைந்திருந்தது.
