சிங்கப்பூர் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ ; மாயமான நால்வரை தேடும் பணி தீவிரம்
சிங்கப்பூர் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ ; மாயமான நால்வரை தேடும் பணி தீவிரம்
ADDED : ஜூன் 11, 2025 01:09 AM

கொச்சி : கேரள கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான சிங்கப்பூர் சரக்கு கப்பலில், மாயமான நான்கு பணியாளர்களை தேடும் பணியை கடலோர காவல்படையினர் தீவிரப்படுத்திஉள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த, 'எம்.வி., வான் ஹாய் 503' என்ற சரக்கு கப்பல், நம் அண்டை நாடான இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பை துறைமுகத்திற்கு கடந்த 7ம் தேதி புறப்பட்டது.
கரும்புகை
கேரளாவின் கண்ணுார் துறைமுகம் அருகே வந்தபோது, கப்பலில் இருந்த கன்டெய்னர் வெடித்ததில்; பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கடலோர காவல் படையினர், நம் கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ்., சூரத்' என்ற கப்பலை மீட்புப் பணிக்காக அனுப்பினர். இத்துடன், கடலோர காவல்படையின் சமுத்ரா பிரஹரி, சாஷேத் ஆகிய இரண்டு கப்பல்களும், தீயை கட்டுக்குள் கொண்டுவர அனுப்பப்பட்டன.
இரவு - பகலாக தண்ணீரை பீய்ச்சியடித்து கப்பலில் பரவிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், கன்டெய்னரில் இருந்து கரும்புகை வெளியேறி வருகிறது. முன்னதாக, கப்பலில் இருந்த 22 பணியாளர்களில், 18 பேரை நம் பாதுகாப்பு படையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பிரத்யேக மீட்புக்குழு
இதில், இரண்டு பேர் அபாய கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக அவர்களை கர்நாடகாவின் மங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாய மான நான்கு பணியாளர்களை, தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக, கடலோர காவல்படையின் 'சாம்ராத்' கப்பலில் பிரத்யேக மீட்புக்குழுவும் வரவழைக் கப்பட்டு, அவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், விபத்து நிகழ்ந்த பகுதியில், 'டோர்னியர்' விமானம் வாயிலாகவும் கடலோர காவல் படையினர் கண்காணித்து வருகின்றனர்.
தீ விபத்துக்குள்ளான கப்பலில் உள்ள கன்டெய்னர்களில் இருந்து கேரள கடற்பரப்பில் எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது என இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட அறிக்கை:
தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து கன்டெய்னர்கள் கடலில் மிதந்து வர வாய்ப்புஉள்ளது.
இது, கேரளாவின் கோழிக்கோடு முதல் கொச்சி இடையே மூன்று நாட்களுக்குள் கரை ஒதுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இப்பகுதி களில் மாவட்ட நிர்வாகத்தினர், கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.