சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடும் சேதம்
சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடும் சேதம்
ADDED : மார் 04, 2026 03:42 AM
ரியாத்: ஈரான் ட்ரோன் தாக்குதலால், சவுதியின், 'அராம்கோ' எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அடைந்துள்ள சேதங்கள் குறித்த செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஈரான், தன்னைச் சுற்றியுள்ள மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள அமெரிக்க துாதரகங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக, உலகின் மிக முக்கிய எரிசக்தி மையங்களில் ஒன்றான சவுதி அரேபியாவின் ராஸ் தனுராவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
தாக்குதலுக்குள்ளான எண்ணெய் சுத்தி கரிப்பு நிலையத்தின் சேதமடைந்த பகுதிகள் மற்றும் உட்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், தாக்குதல் காரணமாக தற்காலிகமாக அதன் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி சந்தை அழுத்தத்தை சந்தித்து வரும் நிலையில், தாக்குதலால் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு முடக்கம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
