58 அதிகாரிகளுடன் பாலியல் உறவு: சீனாவில் 'அழகான கவர்னருக்கு' சிறை
58 அதிகாரிகளுடன் பாலியல் உறவு: சீனாவில் 'அழகான கவர்னருக்கு' சிறை
ADDED : செப் 22, 2024 12:46 AM

பிஜீங்: சீனாவில், 'அழகான பெண் கவர்னர்' என்றுஅழைக்கப்படும் கவர்னர் ஜாங் யாங்குக்கு, 58 அதிகாரிகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டது மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நம் அண்டை நாடான சீனாவில், அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் சீன கம்யூ., கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு, குய்சோவ் மாகாணத்தின் கியானன் நகரத்தின் கவர்னராக பதவி வகித்தவர், ஜாங் யாங், 52.
இவருக்கு, 'அழகான கவர்னர்' என்ற செல்லப் பெயரும் உண்டு. 22 வயதில் சீன கம்யூ., கட்சியில் சேர்ந்த இவர், படிப்படியாக உயர்ந்து, சீன அரசில் உயர்ந்த பதவியை அடைந்தார்.
இதையடுத்து, கியானன் நகரத்தின் கவர்னராக, ஜாங் யாங் நியமிக்கப்பட்டார். இவர், விவசாயிகளுக்கு உதவும் நோக்கில், பழங்கள் மற்றும் விவசாய சங்கத்தைத் துவங்கி பிரபலமானார். மேலும், தன் சொந்த பணத்தை செலவழித்து வயதானவர்களுக்கு உதவினார்.
கடந்த ஜனவரியில், ஜாங் யாங் குறித்த ஆவணப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், தனக்கு விருப்பமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்க, அவர் லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும், தன்னுடன் நெருங்கிப் பழகிய தொழிலதிபருக்கு, உயர் தொழில்நுட்ப தொழிற்பேட்டையில் நிலத்தை மேம்படுத்த, ஜாங் யாங் ஒப்புதல் அளித்ததும் தெரிய வந்தது.
தன்னுடன் வேலை பார்த்த 58 அதிகாரிகளுடன், ஜாங் யாங் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும் அந்த ஆவணப் படத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒருசில அதிகாரிகளை மிரட்டி, வலுக்கட்டாயமாக அவர் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டின்படி, கடந்த ஏப்ரலில், ஜாங் யாங் கைது செய்யப்பட்டார். இந்த மாத துவக்கத்தில், கியானன் நகர கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜாங் யாங், சீன கம்யூ., கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், வழக்கு விசாரணையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சமீபத்தில், ஜாங் யாங்குக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.