கேரளாவில் இருந்து 'கல்ப்' -க்கு கப்பல்; நீண்டகால கனவு நிறைவேற போகுது!
கேரளாவில் இருந்து 'கல்ப்' -க்கு கப்பல்; நீண்டகால கனவு நிறைவேற போகுது!
ADDED : ஆக 29, 2024 02:48 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கப்பலில் பயணம் செய்யும் வாய்ப்பு வரும் ஜனவரியில் நிறைவேறப்போகிறது.
தென் இந்தியாவில் இருந்து பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய வளைகுடா நாடுகளுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் பேர் சென்று வருகின்றனர். குறிப்பாக தமிழகம், கேரளா பகுதியில் இருந்து அதிகம் பேர் இந்த நாடுகளுக்கு சென்று வருகின்றனர். பலரும் விமானங்களை மட்டுமே நம்பி உள்ளனர். இது கட்டண செலவு 50 ஆயிரம் முதல் இருக்கும். அதுவும் விடுமுறை மற்றும் , சீசன் நேரங்களில் பல மடங்கு கட்டணத்தை விமான நிறுவனங்கள் வசூலிக்கின்றன.
கட்டணம் குறையும்
கப்பலில் பயண கட்டணம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை என குறைந்த கட்டணமே வசூலிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, வியட்நாமில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் கேரளாவுக்கு வருவதில்லை. இது கேரள மக்களுக்கு பெரும் குறையாகவே உள்ளது. விமான பயண நேரத்தை விட கப்பல் பயண நேரம் கூடுதலாக இருந்தாலும் கட்டணச்சுமை குறையுமே என்ற ஏக்கத்தில் மக்கள் உள்ளனர்.
கேரள கடலோர கழகம் மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்து கழகம் இணைந்து தீவிர முயற்சிகள் மேற்கொண்டன. இதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டன. இதனையடுத்து தனியார் கப்பல் நிறுனங்களுடன் முக்கிய ஆலோசனை ஆன்லைன் மூலம் சமீபத்தில் நடந்தது. இதில் கோழிக்கோடு மற்றும் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முறையே ஜெபல் வென்டூர்ஸ் பிரைவேட் லிமிட்டெட், ஒயிட் ஷிப்பிங் நிறுவன முக்கிய பிரதிநிதிகள் ஆலோசனையில் பங்கேற்றனர். உரிய ஆவணங்களுடன் கப்பல் போக்குவரத்து சட்டத்திற்குட்பட்டு கப்பல் கழக டைரக்டர் ஜெனரலுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது.
கப்பல் போக்குவரத்திற்கு விரைவில் கிரீன் சிக்னல் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவ்வாறு விரைந்து நடக்கும் பட்சத்தில் வரும் 2025 ஜனவரி மாதம் கப்பல் போக்குவரத்து கொச்சியில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொச்சியில் இருந்து கப்பலில் துபாய்க்கு செல்ல 3 நாட்கள் ஆகுமாம். ஒரு முறை கப்பலில் 600 முதல் 700 பேர் பயணிக்கும் வகையில் கப்பல் தயாராகி கொண்டிருக்கிறது. நபர் ஒருவருக்கு 200 கிலோ எடை லக்கேஜ் கொண்டு செல்ல முடியும். கேரள மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த கனவு நிறைவேறப்போகிறது.