அதிபர் டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச்சூடு; காயமின்றி தப்பினார்
அதிபர் டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச்சூடு; காயமின்றி தப்பினார்
UPDATED : ஏப் 26, 2026 12:35 PM
ADDED : ஏப் 26, 2026 06:59 AM

வாஷிங்டன்: அதிபர் டிரம்ப், துணை அதிபர் வேன்ஸ் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்கான விருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவரை போலீசார் கைது செய்தனர். அதிபர் உள்ளிட்டோர் காயமின்றி தப்பினர்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்கும் நிருபர்களுக்கான இரவு விருந்து நிகழ்ச்சி வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, துணை அதிபர் வேன்ஸ் பங்கேற்று இருந்தனர். திடீரென புகுந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பிறகு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் அதிபர் டிரம்பை அவசர அவசரமாக பாதுகாப்பாக வெளியேற்றனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜேடி.வான்ஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைது
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கலிபோர்னியாவை சேர்ந்த 31 வயதான கோல் அலன் என்பது தெரியவந்தது. கைது
செய்யப்பட்ட கோல் அலன் புகைப்படத்தை அதிபர் டிரம்ப் சமூகவலைதளத்தில்
பதிவிட்டுள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இது மிகவும் பரபரப்பான ஒரு மாலைப் பொழுதாக அமைந்தது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டனர். அவர்கள் துரிதமாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டதால், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுவிட்டார். இந்த நிகழ்ச்சியை மீண்டும் ஒருமுறை நடத்தியே ஆக வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
சிறந்த பாதுகாப்பு
வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: வரலாற்றிலேயே மிகச்சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நம்மிடம் உள்ளன. மனதளவில் பாதிக்கப்பட்ட சிலர் இருக்கும் போது, அவர்களால் சிக்கலை உருவாக்க முடியும்.
இருப்பினும், பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள் தங்களால் இயன்ற மிகச்சிறந்த பணியையே செய்கிறார்கள். நம்மிடம் மிகச்சிறந்த பணியாளர்கள் உள்ளனர். அது தற்போது நிரூபிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மிக வேகமாக ஓடினார்.
பாதுகாப்புப் படையினர் அவரை மடக்கிப் பிடித்த விதம் மிகவும் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. இது ஏதோ ஒரு விசித்திரமான உணர்வை ஏற்படுத்துகிறது. எந்தவொரு பணியையும் செய்யாமல் சும்மா இருப்பவர்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதில்லை.
ஈரானுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவதிலிருந்து, இச்சம்பவம் என்னை ஒருபோதும் தடுத்துவிடாது. இச்சம்பவத்திற்கும் ஈரானுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.
முன்னுதாரணம்
நமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, அத்தகைய தொடர்பு ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. இருப்பினும், நாம் செய்துவரும் சிறப்பான பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம். உலகின் பிற நாடுகளில் நிகழும் பெரும் வன்முறைச் சம்பவங்களை நீங்கள் உற்று நோக்கலாம்.
உலகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் பரவலாக நிகழ்ந்து வருகின்றன. வர்த்தகம் மற்றும் ராணுவத் துறைகளில் நாம் உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறோம்.
அனுமதிக்க முடியாது
உலகின் மிகச்சிறந்த ராணுவத்தை நாம் கொண்டிருக்கிறோம்.ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஒருவேளை அவர்களுக்கு அணு ஆயுதம் கிடைத்துவிட்டால், அதை ஒப்பிடும்போது மற்ற அனைத்துப் பிரச்னைகளும் மிகச் சாதாரணமானவையாகவே தோன்றும்.
அவர்கள் அந்த அணு ஆயுதத்தைப் பயன்படுத்தத் தயங்கமாட்டார்கள்; இது குறித்து மார்கோவும் நானும் இன்றைக்குப் பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி அந்த ஆயுதத்தைப் பயன்படுத்திவிடுவார்கள். நாம் அதை அனுமதிக்க முடியாது.இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
