ஜமைக்காவில் துப்பாக்கிச்சூடு: நெல்லை வாலிபர் கொலை; உடலை தமிழகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை
ஜமைக்காவில் துப்பாக்கிச்சூடு: நெல்லை வாலிபர் கொலை; உடலை தமிழகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை
UPDATED : டிச 18, 2024 04:12 PM
ADDED : டிச 18, 2024 04:04 PM

கிங்ஸ்டன்: ஜமைக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், கொள்ளையர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான ஜமைக்கா நாட்டில், பிராவிடன்ஸ் தீவில் ஜேகே புட் என்ற சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இங்கு, திருநெல்வேலி மாவட்டம் டவுனை சேர்ந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகிய 4 பேர் பணியாற்றி வந்தனர்.இந்த சூப்பர் மார்க்கெட்டை சுரண்டையைச் சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர் நடத்தி வருகிறார்
இந்நிலையில், இன்று (டிச., 18) இந்திய நேரப்படி, அதிகாலை 1.30 மணி அளவில் கொள்ளையர்கள் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து, பணத்தை கொள்ளையடித்து விட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதில் விக்னேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலே பலியாகி உள்ளார். மேலும் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இறந்த, விக்னேஷின் உடலை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று அவரது உறவினர்கள் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் இன்று மனு அளித்தனர்.