டிரம்ப்புக்கு கணிசமாக அதிகரித்த இந்திய வம்சாவளி ஆதரவு; அமெரிக்க அதிபர் தேர்தல் சர்வேவில் தகவல்
டிரம்ப்புக்கு கணிசமாக அதிகரித்த இந்திய வம்சாவளி ஆதரவு; அமெரிக்க அதிபர் தேர்தல் சர்வேவில் தகவல்
ADDED : அக் 31, 2024 08:06 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த முறையை விட, தற்போது குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்புக்கு இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவ.,5ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சியின் வேட்பாளராக டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினரின் வாக்குகளை கவரும் முயற்சியில் இரு வேட்பாளர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர். அமெரிக்காவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும், இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, ஜியார்ஜியா மற்றும் மிச்சிகன் உள்ளிட்ட மாகாணாங்களில் 50 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். அவர்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து 'இந்தியன் - அமெரிக்கன் அணுகுமுறை 2024' என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், இந்திய வம்சாவளியினர் 60 சதவீதம் பேர் கமலா ஹாரிஸூக்கு ஆதரவாகவும், 30 சதவீதம் பேர் டிரம்ப்புக்கு ஆதரவாகவும் வாக்களிக்க உள்ளது தெரிய வந்துள்ளது. இது கடந்த முறையை விட டிரம்ப்புக்கு கூடுதலான ஆதரவாகும்.
அதிலும், குறிப்பாக, இந்திய வம்சாவளி பெண்கள் கமலா ஹாரிஸூக்கும், ஆண்கள் டிரம்ப்புக்கும் ஆதரவு கொடுத்துள்ளனர்.
ஆரம்பத்தில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்று வந்த நிலையில், தேர்தல் நெருங்க நெருங்க டிரம்ப்புக்கு ஆதரவு பெருகி வருவது அடுத்தடுத்து வெளியாகி வரும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.