ADDED : டிச 10, 2024 01:54 AM

வாஷிங்டன்: ''சட்டவிரோதமான முறையில் நம் நாட்டுக்குள் நுழைந்தவர்களை திருப்பி அனுப்புவதில் உறுதியாக உள்ளோம். அதே நேரத்தில், சட்டப்பூர்வமான முறையில் வருவோருக்கான விசா நடைமுறைகள் எளிமையாக்கப்படும்'' என, அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபராக, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்வாகியுள்ளார். அடுத்தாண்டு, ஜன., 20ல் அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், குடியேற்ற நடைமுறைகள் தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவது என்பது மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. கிரிமினல்கள், கொலை குற்றவாளிகள் என, பலரும் இங்கு வந்துவிடுகின்றனர். இது உள்நாட்டு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
அதனால், நான் பதவியேற்ற உடன் இந்தப் பிரச்னைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். முதலில் கிரிமினல்கள் வெளியேற்றப்படுவர்.
அதற்கடுத்து, மற்ற நாடுகளில் குற்ற வழக்கில் சிக்கி இங்கு வந்துள்ளோர் வெளியேற்றப்படுவர்.
அதன்பின், சட்டவிரோத முறையில் வந்துள்ள அனைவரையும் வெளியேற்றுவோம். இதை செய்தே தீர வேண்டும்.
அதே நேரத்தில் அமெரிக்காவில் வேலை பார்க்க வேண்டும் என்ற கனவில் பல இளைஞர்கள் உள்ளனர். அதுபோன்ற கனவுடன் இளைஞர்களாக வந்து, குடியுரிமை கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அமெரிக்க விசாவுக்காக ஆன்லைனில் பதிவு செய்து பலர் நீண்ட காலம் காத்திருக்கின்றனர்.
இதுபோன்று, சட்டப்பூர்வமான முறையில் வருவோருக்கான நடைமுறைகள் எளிமைபடுத்தப்படும். அவர்களுடைய பின்புலம், படிப்பு, திறன், வழக்குகள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டு, விசா நடைமுறைகள் மிகவும் எளிமையாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

