சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் குற்றவாளி: உறுதி செய்தது நீதிமன்றம்!
சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் குற்றவாளி: உறுதி செய்தது நீதிமன்றம்!
UPDATED : செப் 24, 2024 01:15 PM
ADDED : செப் 24, 2024 01:11 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன், தம் பதவிக்காலத்தில் பரிசுப்பொருட்களை பெற்றதற்காகவும், நீதிக்கு இடையூறு செய்தமைக்காகவும், அவரை குற்றவாளி என்று கோர்ட் அறிவித்தது. அவருக்கு, 7 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன், அந்நாட்டு அரசில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தார். அவர் பதவியில் இருந்த காலத்தில் கடுமையான ஊழல்களை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகினார். ஊழல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது. இன்று (செப்.,24) உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வின்சென்ட் ஹூங் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
குற்றவாளி
அப்போது, பதவிக்காலத்தில் பரிசுப்பொருட்களை பெற்றது, நீதிக்கு இடையூறு விளைவித்தது ஆகிய 5 குற்றச்சாட்டுகளில் ஈஸ்வரன் தவறை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் மீதிருந்த வேறு சில கடுமையான குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. பரிசு பெற்றது, நீதிக்கு இடையூறு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில், அவர் குற்றம் இழைத்திருப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
அவருக்கான சிறைத்தண்டனை அறிவிக்கப்படவில்லை. அதிகபட்சம் 7 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக சட்டத்துறை தகவல்கள் வெளியாகியுள்ளன.