கொரோனா வேகமெடுக்கும் சிங்கப்பூர் டாக்டர்கள் எச்சரிக்கை
கொரோனா வேகமெடுக்கும் சிங்கப்பூர் டாக்டர்கள் எச்சரிக்கை
ADDED : ஜன 07, 2024 12:48 AM
சிங்கப்பூர், கொரோனா தொற்று பலமுறை உருமாறியுள்ளது. தற்போது, ஜே.என்.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இதன் பரவல் கடந்த இரு மாதங்களாக அதிகரித்து காணப்பட்டது.
இதன் காரணமாக இங்குள்ள மருத்துவமனைகளில், வழக்கத்தை விட சுவாசக்கோளாறு பிரச்னையுடன் வருவோர் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கூடுதல் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், அதற்கேற்ப போதுமான மருந்துகளும் கையிருப்பில் வைக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் 20 சதவீதம் நோய் பாதிப்பு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அங்குள்ள டாக்டர் ஒருவர்கூறியதாவது:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட பலர் வெளிநாடுகளுக்கு சென்றதே தொற்று பாதிப்பு குறைந்ததற்கு காரணம். எனினும், விடுமுறை முடிந்து மீண்டும் மக்கள் திரும்பும்போது, கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
வெளிவட்டார தொடர்புகள் அதிகரிப்ப தாலும், குளிர்காலம் நிலவுவதாலும் தொற்று பாதிப்பு அடுத்த இரண்டு வாரங்களில் அதிகரிக்கக்கூடும்.
அடுத்ததாக பிப்., 10ல் சீன புத்தாண்டும் கொண்டாடப்பட உள்ளது. அப்போதும், மக்கள் அதிகளவு கூடும் நிகழ்வுகள் அரங்கேறும்.
இவ்வாறு அவர் கூறினார்.