எனக்கு ஒன்னும் இல்ல, நல்லாயிருக்கேன்! துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பின் பிரபல பாடகர் அறிவிப்பு
எனக்கு ஒன்னும் இல்ல, நல்லாயிருக்கேன்! துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பின் பிரபல பாடகர் அறிவிப்பு
ADDED : செப் 03, 2024 10:23 AM

வான்கூவர்: நான் நலமுடன் இருக்கிறேன் என்று பிரபல பாடகர் தில்லான் அறிவித்துள்ளார்.
பஞ்சாபைச் சேர்ந்தவர் பிரபல பாடகர் அம்ரித்பால் சிங் தில்லான். சுருக்கமாக ஏ.பி. தில்லான் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அவர் தற்போது கனடாவில் உள்ள வான்கூவரில் வசித்து வருகிறார்.
அவரின் வீட்டின் அருகே நேற்று நள்ளிரவில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் உருவாக்கியது.
இந்நிலையில் நான் நலமுடன் இருக்கிறேன் என்று அறிவித்துள்ளார் பாடகர் தில்லான். இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறி உள்ளதாவது: நானும் என்னுடன் உள்ளவர்களும் நலமாக இருக்கிறோம். என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றிகள். உங்கள் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்று கூறி உள்ளார்.
இதனிடையே துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. துப்பாக்கிச்சூட்டுக்கு நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய்-ரோகித் கோதரா கும்பல் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சஞ்சய் தத் நடிப்பில் ஓல்டு மணி ஆல்பம் பாடலால் கோபம் அடைந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் சந்தேகிக்கின்றனர்.
பிஷ்னோய் கும்பல் உள்ளூர், வெளியூர் சிறைக்கைதிகள் என கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்பை உருவாக்கி குற்றச்செயல்களை அரங்கேற்றி வருபவர். 2018ம் ஆண்டில் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.