டாக்கா பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கு எதிராக முழக்கம்
டாக்கா பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கு எதிராக முழக்கம்
ADDED : டிச 27, 2025 07:57 AM

டாக்கா: வங்கதேசத்தில் உள்ள டாக்கா பல்கலையில், இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து, நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.
துப்பாக்கி சூடு இதையடுத்து, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. 2026 பிப்., 12ல், அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து வங்கதேசத்தில் வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. ஷேக் ஹசீனா ராஜினாமாவுக்கு முக்கிய காரணமாக இருந்த இன்குலாப் மாஞ்சோ அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாதி, கடந்த வாரம் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரை தொடர்ந்து, மத நிந்தனை செய்ததாக கூறி, தீபு சந்திர தாஸ் என்ற ஹிந்து இளைஞர் வன்முறை கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். ஆத்திரம் அடங்காத கும்பல், அவரது உடலை மரத்தில் கட்டி வைத்து தீயிட்டு கொளுத்தினர்.
குற்றச்சாட்டு இதே போல பல்வேறு இடங்களில், குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வங்கதேசத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு இந்தியா தான் காரணம் என, அந்நாட்டு எதிர்க்கட்சிகளும், இடைக்கால அரசும் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் டாக்காவில் உள்ள டாக்கா பல்கலையில் நேற்று நடந்த பேரணியில், இந்தியாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பேரணியில் பங்கேற்றவர்கள், 'நான் ஹாதி; நான் ஹாதி' என முழக்கமிட்டனர். மேலும், ஹாதி கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர்.
இதற்கி டையே, பல்கலையில் உள்ள ஒரு உணவகம் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழல், இடைக்கால அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

