தென்கொரியா பொய் செய்தி வெளியிட்டால் ஊடகங்களுக்கு தண்டனை
தென்கொரியா பொய் செய்தி வெளியிட்டால் ஊடகங்களுக்கு தண்டனை
ADDED : டிச 25, 2025 01:34 AM

சியோல்: தென்கொரியாவில் பொய் தகவல்களை பரப்பும் செய்தி நிறுவனங்கள் மற்றும் இணைய ஊடகங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கும் மசோதா அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லீ ஜே மியுங் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. நேற்று அந்நாட்டு பார்லிமென்ட்டில், சர்ச்சைக்குரிய புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
செய்தி நிறுவனங்களும், பெரிய யு டியூப் சேனல்களும், சட்டவிரோதமான, பொய்யான தகவல்களை, தீங்கு விளைவிக்கும் அல்லது லாப நோக்கத்துடன் பரப்பினால், நீதிமன்றங்கள் ஐந்து மடங்கு வரை அபராதம் விதிக்கலாம் என்பது தான் அது.
அதன்படி முதல்முறையாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 லட்சம் ரூபாய் வரையிலும், இரண்டு முறைக்கு மேல் அதே குற்றத்தை செய்தால், 6 கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்க அந்த சட்டம் வழிவகுக்கிறது. அத்துடன் கடுமையான சிறை தண்டனை உள்ளிட்டவைகளும் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
நாட்டில் அதிகரித்து வரும் போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள், சமூக பிளவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி ஆளும் அரசு இதனை நிறைவேற்றியுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினரும், பத்திரிகையாளர் அமைப்புகளும் இது கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளன.

