ADDED : டிச 14, 2024 11:22 PM

சியோல் : தென் கொரியாவில் ராணுவ சட்டத்தை பிரகடனம் செய்த யூன் சுக் இயோலை பதவிநீக்க வலியுறுத்தி, அந்நாட்டு பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றது; இதையடுத்து, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா தொடர்பாக ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து, அந்நாட்டின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், 63, அவசரநிலை ராணுவ சட்டத்தை சமீபத்தில் அமல்படுத்தினார்.
இதற்கு எதிர்க்கட்சிகளும், ஆளுங் கட்சியில் சில எம்.பி.,க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, பார்லிமென்ட் உடனடியாக கூட்டப்பட்டு, அவசர நிலையை நீக்க தீர்மானம் நிறைவேற்றியது.
இதனால், சில மணி நேரங்களில் அவசரநிலை அறிவிப்பை யூன் சுக் இயோல் திரும்பப் பெற்றார். அவர் பதவி விலக வலியுறுத்தி, நாட்டின் பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இதற்கிடையே, அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோலை நீக்க வலியுறுத்தி, அந்நாட்டு பார்லி.,யில் கடந்த வாரம் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 300 எம்.பி.,க்கள் உடைய பார்லி.,யில், தீர்மானம் வெற்றி பெற, 200 பேரின் ஆதரவு தேவை.
இதற்கு எதிர்க்கட்சிகளின் 192 எம்.பி.,க்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் தோல்வி அடைந்தது. எனினும், பல்வேறு இடங்களில் யூன் சுக் இயோலுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோலை நீக்க வலியுறுத்தி, பார்லி.,யில் நேற்று மீண்டும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடந்தது.
அப்போது, தீர்மானத்துக்கு ஆதரவாக, 204 எம்.பி.,க்கள் ஓட்டளித்த நிலையில், 85 பேர் எதிர்த்து ஓட்டளித்தனர்.
எட்டு ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக பார்லி.,யில் தெரிவிக்கப்பட்டது.
பார்லி.,யில், எதிர்க்கட்சிகளின் பலம் 192 ஆக உள்ள நிலையில், சில ஆளுங்கட்சி எம்.பி.,க்களும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளித்ததால், அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் விலகும் நிலை ஏற்பட்டது.
பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அதிபர் பதவியில் இருந்து கடமையாற்ற யூன் சுக் இயோலுக்கு தடை விதிக்கப்பட்டு, அவரது அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.
இதையடுத்து, பிரதமர் ஹான் டக் -சூ இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். யூன் சுக் இயோலின் பதவி நீக்கத்தை உறுதிப்படுத்துவது தொடர்பாக, 180 நாட்களுக்குள் தென் கொரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் முடிவு செய்யும்.
அவருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்தால், தென் கொரிய வரலாற்றில் பதவி நீக்கம் செய்யப்பட்ட இரண்டாவது அதிபர் என்ற பெயரை யூன் சுக் இயோல் பெறுவார்.
இதைத் தொடர்ந்து, புதிய அதிபரை தேர்வு செய்ய, 60 நாட்களுக்குள் தேர்தல் நடக்கும். யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டதை, தென் கொரிய மக்கள் வீதிகளில் கூடி கொண்டாடினர்.