அவசர நிலை அறிவிப்பு எதிரொலி: தென் கொரியா அதிபர் பதவி பறிப்பு
அவசர நிலை அறிவிப்பு எதிரொலி: தென் கொரியா அதிபர் பதவி பறிப்பு
UPDATED : டிச 14, 2024 04:41 PM
ADDED : டிச 14, 2024 04:38 PM

சியோல்: அவசர நிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டதால், தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இதற்கான தீர்மானம் அந்நாட்டு பார்லிமென்டில் நிறைவேறியது.
எதிர்ப்பு
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் கடந்த 3ம் தேதி அவசர நிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியில் பல எம்.பி.,க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக பார்லிமென்ட் கூடி, அவசர நிலையை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சில மணி நேரங்களிலேயே அவசர நிலை அறிவிப்பை அதிபர் திரும்பப் பெற்றார்.
தடை
இதற்கிடையே அவரை பதவி நீக்கம் செய்ய பார்லிமென்டில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. ஆளும் கட்சி எம்.பி.,க்கள் பங்கேற்காததால் அது தோல்வி அடைந்தது. மீண்டும் பதவி நீக்க மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து இருந்தன. அவசர நிலை அறிவிக்கப்பட்டது தொடர்பாக பார்லிமென்ட் குழு விசாரித்து வருகிறது. அதிபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
204 பேர் ஆதரவு
இந்நிலையில், யூன் சுக் இயோலுக்கு எதிராக இன்று மீண்டும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மொத்தம் 300 எம்.பி.,க்கள் உள்ள நிலையில், தீர்மானம் நிறைவேற 200 பேரின் ஆதரவு தேவை. ஆனால், அதிபருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவாக 204 பேர் ஓட்டுப் போட்டனர். எதிராக 85 பேர் ஓட்டளித்தனர். 8 ஓட்டுகள் செல்லாதது என அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டப்படி பிரதமர் ஹன் டக் சூ, இடைக்கால அதிபராக செயல்படுவார்.
இரண்டாவது அதிபர்
மேலும் அந்நாட்டு சட்டப்படி, யூன் சுக் இயோல் மீதான குற்றச்சாட்டு குறித்து அரசியலமைப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தும். அதன் முடிவில் அவரை நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்குதல் அல்லது மீண்டும் பதவியில் அமர்த்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இது முடிவடைய ஆறு மாதங்கள் ஆகும்.அந்நாட்டில் பதவி நீக்கம் செய்யப்படும் இரண்டாவது அதிபர் யூன் சுக் இயோல் ஆவார். இதற்கு முன்னர், பார்க் ஜியூன் ஹை 2017 பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் அதிபர் ஆவார்.