ADDED : அக் 31, 2024 02:20 AM

பார்சிலோனா: ஸ்பெயினில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 51 பேர் பலியாகினர்; பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் வெலான்சியா மாகாணத்தில் நேற்று திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது, கரையோரங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், பிரதான சாலைகளை வெள்ளக்காடாக்கியது. சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பலர் மாயமாகினர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புப்படையினர் ஹெலிகாப்டர்கள் வாயிலாக பத்திரமாக மீட்டனர். எனினும், மாயமானவர்களில் பலர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்ததால் சாலை, ரயில் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 51 பேர் உயிரிழந்ததாகவும், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.