இலங்கை எதிர்காலம் என்ன ஆகும்; இன்று நடக்கிறது அதிபர் தேர்தல்!
இலங்கை எதிர்காலம் என்ன ஆகும்; இன்று நடக்கிறது அதிபர் தேர்தல்!
ADDED : செப் 21, 2024 08:29 AM

கொழும்பு: இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் அதிபர் தேர்தல் ஓட்டுப்பதிவு, இன்று தொடங்கியுள்ளது. தற்போதைய அதிபர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, இடதுசாரி கூட்டணி தலைவர் அனுரா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அண்டை நாடான இலங்கையில், பல்லாண்டுகளாக நீடித்த உள்நாட்டுப்போர் 2017ல் முடிவுக்கு வந்தது. அப்போது ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்சே குடும்பத்தினர், அந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களை வளப்படுத்திக் கொண்டனர். விளைவு, உலகெங்கும் கோவிட் தொற்று ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இலங்கை கடனில் மூழ்கியது. அந்நியச் செலாவணி கையிருப்பு இன்றி திவால் நிலைக்கு தள்ளப்பட்டது.
விலைவாசி தாறுமாறாக உயர்ந்த நிலையில், மக்கள் போராட்டம் வெடித்தது; அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, ராஜினாமா செய்து விட்டு தப்பியோடினார்.தொடர்ந்து பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, இந்தியா, ஐ.எம்.எப்., மற்றும் உலக நாடுகளின் உதவியை பெற்று, நிலைமையை சீர் செய்தார்.
இப்போது பொருளாதார பிரச்னைகளில் இருந்து இலங்கை ஓரளவுக்கு மீண்டு வந்துள்ளது. இந்நிலையில், அதிபர் ரணில் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், தற்போதைய அதிபர் ரணில் மீண்டும் போட்டியிடுகிறார். தான் செய்த பொருளாதார மீட்பு செயல்பாடுகளை சீர்துாக்கிப் பார்த்து ஓட்டுப்பபோட வேண்டும் என்று அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அவரை எதிர்த்து, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார். இவருக்கு, இலங்கை தமிழ் அரசுக்கட்சியும், இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரவு தருகின்றன.இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசநாயகே, களத்தில் முன்னணியில் இருக்கிறார்.
கடும் போட்டி
ஒரு காலத்தில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட இந்த அமைப்பினர், இப்போது தேர்தல் அரசியலில் தீவிர பணியாற்றி வருகின்றனர். கோத்தபயாவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் முன்னின்ற அனுராவுக்கு, நாடு முழுவதும் பரவலான ஆதரவு இருக்கிறது.முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல், தமிழ் கூட்டமைப்பின் பொது வேட்பாளர் அரியநேத்திரன் உள்ளிட்ட பலரும் களத்தில் இருந்தாலும், ரணில், சஜித், அனுரா என மூவர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
இலங்கையில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் தமிழர்கள் மத்தியில், முந்தைய தேர்தல்களை போல இந்த தேர்தலில் ஒற்றுமை இல்லை. தமிழர் கட்சிகள் வெவ்வேறு அணிகளாக பிரிந்து, மூன்று முக்கிய வேட்பாளர்களுக்கும் ஆதரவு அளிக்கும் நிலை காணப்படுகிறது.
இந்தியாவுக்கு சவால்
போட்டியாளர்களில், ரணில் ஒருவர் தான் இந்தியாவின் நண்பர். 'இந்தியாவின் நலன்களை பாதுகாப்போம்.சீனாவுடன் உறவு இருந்தாலும், இந்தயாவின் பாதுகாப்பு நலன்களுக்கு உட்பட்டதாகவே அது இருக்கும்' என்று கூறி வருபவர். மற்ற இருவரும், அவ்வப்போது இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருபவர்கள். அவர்களில் ஒருவர் வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியா - இலங்கை உறவில் புதிய சவால்கள் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
மொத்தம் 1.70 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்கின்றனர். இதில், 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்றால் மட்டுமே அதிபராக முடியும். யாருமே அந்தளவு ஓட்டு பெறவில்லை எனில், இரண்டாம் கட்டத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடத்தப்படும். இன்று மாலை ஓட்டுப்பதிவு முடிந்த உடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.