ADDED : செப் 10, 2025 03:33 AM
கொழும்பு:இலங்கையில் முன்னாள் அதிபர்கள் மற்றும் அவர்கள் இறந்தால் அவர்களது மனைவிக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை பார்லிமென்ட்டில் நிறைவேற்றிக்கொள்ள அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில் முன்னாள் அதிபர்களுக்கு அதிகாரப்பூர்வ இல்லம், மாதாந்திர உதவித் தொகையாக 97,500 ரூபாய், செயலர் வைத்துக்கொள்ள 1,00,000 ரூபாய், அதிகாரப்பூர்வ போக்குவரத்து மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தற்போது இலங்கையில் ஐந்து முன்னாள் அதிபர்கள் மற்றும் மறைந்த அதிபர் ஒருவரின் மனைவி உள்ளனர். இவர்களுக்கு இந்த சலுகைகள் செல்கின்றன.
ஆட்சிக்கு வந்ததும், முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகளை நிறுத்துவதாக ஆளும் தேசிய மக்கள் சக்தி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த சலுகைகளை நிறுத்த அதிபர் அனுரா குமார திசநாயகே தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதா கடந்த ஜூலையில் தயாரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 7ல் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இது அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பதை உறுதி செய்ய சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. மசோதாவை ஆய்வு செய்த நீதிபதிகள், சாதாரண மெஜாரிட்டி மூலம் பார்லிமென்ட்டில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என கூறினர்.
இந்த மசோதா இன்று பார்லிமென்ட்டில் விவாதத்திற்கு வருகிறது. விரைவில் சட்டமாக உள்ளது.