ADDED : பிப் 10, 2025 03:51 AM

கொழும்பு: இலங்கையில், மின் நிலையத்துக்குள் நுழைந்து குரங்கு செய்த சேட்டையால் நாடு முழுதும் மின் தடை ஏற்பட்டது.
நம் அண்டை நாடான இலங்கையில் நேற்று காலை திடீரென மின் தடை ஏற்பட்டது. கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள பானாந்துறை மின் நிலையத்தில் ஏற்பட்ட மின் அழுத்த மாறுபாடு பிரச்னையால் மின் தடை ஏற்பட்டதாக இலங்கை மின் வாரியம் அறிவித்தது.
சில நிமிடங்களில் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால், ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக மின்சாரம் வராததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மருத்துவமனைகளிலும் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். குடிநீர் சப்ளையும் இல்லாததால் குடிக்க நீரின்றி பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் குமர ஜெயக்கொடி கூறியதாவது: கொழும்பு புறநகர் பகுதியான பானாந்துறை மின் சப்ளை நிலையத்தில் ஏற்பட்ட மின் அழுத்த பிரச்னையால், நாடு முழுதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. விரைவில் சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும். மின் தடைக்கு பானாந்துறை தேசிய மின் சப்ளை நிலையத்தில் புகுந்து குரங்கு செய்த சேட்டையே காரணம்.
பணியாளர்கள் தீவிர முயற்சியால் சில மணி நேரங்களில் கோளாறு சரி செய்யப்பட்டு, மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மின் சப்ளை செய்யப்பட்டது. தொடர்ந்து பிற இடங்களிலும் மின்சப்ளை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.