மோடியின் பயணத்தை தொடர்ந்து 11 மீனவர்களை விடுவித்தது இலங்கை
மோடியின் பயணத்தை தொடர்ந்து 11 மீனவர்களை விடுவித்தது இலங்கை
ADDED : ஏப் 06, 2025 11:10 PM

கொழும்பு: இலங்கை சென்றிருந்த நம் பிரதமர் நரேந்திர மோடி, 'மீனவர் பிரச்னையில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்வதுடன், படகுகளையும் விடுவிக்க வேண்டும்' என, வலியுறுத்தியதை ஏற்று, சிறப்பு நிகழ்வாக, 11 மீனவர்களை விடுவிப்பதாக இலங்கை அரசு நேற்று அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக, நம் அண்டை நாடான இலங்கைக்கு சென்றார். பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம், இலங்கை அதிபர் அநுரா குமார திசநாயகேவை சந்தித்து பேசினார்.
அப்போது, இலங்கை வாழ் தமிழர்கள் பிரச்னை தொடர்பாக விரிவாக பேசப்பட்டது. அதிகாரப் பகிர்வு அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 13வது பிரிவை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.
இதைத் தவிர, மீனவர் பிரச்னை குறித்தும் மோடி ஆலோசனை நடத்தினார். 'மீனவர்கள் பிரச்னை குறித்தும், அவர்களது வாழ்வாதாரம் குறித்தும் விவாதித்தோம். இந்த விஷயத்தில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது' என, சந்திப்புக்குப் பின் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கவும் வலியுறுத்தியதாக மோடி தெரிவித்தார்.
மூன்று நாள் பயணத்தை முடித்து, மோடி நேற்று அங்கிருந்து புறப்பட்டார். இதற்கிடையே, இலங்கை அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது.
சிறப்பு நிகழ்வாக, 11 மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசு நேற்று அறிவித்துள்ளது.
பயணத்தின் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி, வடமத்திய இலங்கையின் அனுராதபுரத்துக்கு மோடி சென்றார். திசநாயகேவும் உடன் சென்றார். அங்கு இந்தியா உதவியுடன் கட்டப்பட்டுள்ள இரண்டு ரயில்வே திட்டங்களை மோடி துவக்கி வைத்தார்.
மேலும் அங்குள்ள புத்த மத தலமான ஸ்ரீ மகா போதி கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

