தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: இலங்கை அதிபர் ஆதரவு குரல்
தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: இலங்கை அதிபர் ஆதரவு குரல்
UPDATED : ஜன 06, 2024 12:40 PM
ADDED : ஜன 06, 2024 04:53 AM

கொழும்பு : இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தன்னாட்சி அதிகாரம் வழங்கும், 13வது அரசியலமைப்பு திருத்த தீர்வுக்கு, அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கையில் இனப் பிரச்னைக்கு தீர்வு காண, முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ், முன்னாள் இலங்கை அதிபர் ஜெயவர்தனே இணைந்து, 1987ல் அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் 13வது திருத்தம் செய்வதற்கான உடன்பாட்டை உருவாக்கினர்.
அரசியலமைப்பு சட்டம் 13ஏ தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வு வழங்குகிறது. இந்த திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் வாயிலாக இலங்கையில் உள்ள எல்லா சமூக மக்களிடத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என, நம்பப்படுகிறது.
இந்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கையின் பெரும்பாலான தமிழ் கட்சிகள் கோரி வருகின்றன. இந்தியாவும் அவர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், தமிழர்கள் பெரும்பான்மை வகிக்கும் யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது:
இந்த, 13வது திருத்தத்தின் விதிகளை நாம் ஆராய்ந்தால், வலுவான உள்ளூர் பொருளாதாரத்தை நிறுவுவதற்கு போதுமான அதிகாரம் உள்ளது. அந்த விவகாரங்களில் தலையிட மாட்டோம் என உறுதியளிக்கிறோம். அதற்கான முன்முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும் என நான் ஊக்குவிக்கிறேன்.
தற்போது, மேற்கு மாகாணம் சுதந்திரமான செலவினங்களைச் செய்யக்கூடிய ஒரே பிராந்தியமாக உள்ளது. மற்றவை நிதி ரீதியாக அதைச் சார்ந்திருக்கின்றன.
இதனால் இந்த விவகாரத்தில் மறுபரிசீலனை அவசியமாகிறது. 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை பயன்படுத்துவதன் வாயிலாக ஒவ்வொரு மாகாணமும் வளர்ச்சிக்கான பாதையை பட்டியலிட முடியும். இந்த அதிகாரங்களை செயல்படுத்த வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் பேசினார்.