சீனாவில் கரையை கடந்தது புயல் 2,83,000 பேர் வெளியேற்றம்
சீனாவில் கரையை கடந்தது புயல் 2,83,000 பேர் வெளியேற்றம்
ADDED : ஆக 01, 2025 03:34 PM
ஷாங்காய்: சீனாவின் பொருளாதார மையமான ஷாங்காயில், 'கோ-மே' புயல் கரையைக் கடந்ததால், பலத்த மழை மற்றும் காற்று வீசியது. முன்னெச்சரிக்கையாக, கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து, 2.83 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
நம் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங் உட்பட பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தென் சீனக் கடல்பகுதியில் மையம் கொண்டிருந்த கோ-மே புயல் நேற்று முன்தினம் கரையைக் கடந்தது.
கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 83 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அத்துடன் பலத்த மழையும் கொட்டியது. இதனால் கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 83,000 பேர் வெளியேற்றப்பட்டனர். நகரம் முழுதும் 1,900க்கும் மேற்பட்ட தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.
ஷாங்காயின் இரண்டு சர்வதேச விமான நிலையங்களில், 640 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.

