சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்து வரலாறு படைத்தார் சுபான்ஷு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்து வரலாறு படைத்தார் சுபான்ஷு
UPDATED : ஜூன் 28, 2025 06:18 PM
ADDED : ஜூன் 26, 2025 04:14 PM

கேப் கேனவரல்: அமெரிக்காவின் டிராகன் விண்கலம் வாயிலாக நான்கு பேர் குழுவில் ஒருவராக விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, நேற்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றை படைத்தார்.
அமெரிக்காவின், 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம், விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 'ஆக்சியம் - 4' திட்டத்தில் இந்தியா பங்கேற்க விரும்பியது.
பயிற்சி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 'ககன்யான்' எனப்படும் இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் அழைத்து வரும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
வரும் 2027ல் இதை செயல்படுத்த உள்ளது. அதற்கான பயிற்சிக்காக இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை, 39, 'ஆக்சியம் - 4' திட்டத்தில் அனுப்பி வைக்க இஸ்ரோ முடிவு செய்தது.
இந்த பயணத்திற்காக, ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் சுபான்ஷு பயிற்சி பெற்றார். அங்கு அவருக்கு, ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தின் இயக்கம், டாக்கிங் எனப்படும் விண்கலத்தை விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் செயல்முறைகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
அனைத்து பயிற்சிகளும் முடிந்தபின், 'ஆக்சியம் - 4' குழுவினர் அமெரிக்காவின் புளோரிடோவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டனர்.
இதில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன், அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியின் திபோர் கபு, போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள், 'பால்கான் - 9' ராக்கெட் உதவியுடன் ஏவப்பட்ட 'க்ரூவ் டிராகன்' விண்கலத்தில் அமர்ந்து சென்றனர். ஏவப்பட்டதிலிருந்து 28 மணிநேரம் பயணித்த இந்த க்ரூவ் டிராகன், இந்திய நேரப்படி நேற்று மாலை 4:01 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துடன், 'சாப்ட் கேப்சர்' முறையில் இணைந்தது.
ஆய்வு
அதன்பின் காற்று கசிவு மற்றும் அழுத்த சோதனைகள் நடத்தப்பட்டன. அவை சீராக இருந்ததை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தின் கதவு திறந்தது.
விண்கலத்தில் இருந்து இரண்டாவது நபராக சுபான்ஷு சுக்லா உள்ளே நுழைந்தார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
அவரையும், குழுவைச் சேர்ந்த மற்ற மூவரையும் ஆராய்ச்சி பணிகளுக்காக, கடந்த ஏப்ரலில் சென்று நிலையத்தில் ஏற்கனவே தங்கியுள்ள ஏழு பேர் வரவேற்றனர். ஆக்சியம்- - 4 குழுவினர், 14 நாட்கள் தங்கி 60க்கும் மேற்பட்ட ஆய்வுகளில் ஈடுபடுவர்.