மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சூடான் துணை ராணுவ தளபதிக்கு சிக்கல்
மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சூடான் துணை ராணுவ தளபதிக்கு சிக்கல்
ADDED : நவ 22, 2025 12:42 AM

கார்ட்டூம்: சூடானில், மனித குலத்திற்கு எதிராக போர்க்குற்றங்கள் புரிந்ததாக ஆர்.எஸ்.எப்., எனப்படும், துணை ராணுவப் படையின் முக்கிய தளபதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
அதிகார போட்டி வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சிக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே, 2023ம் ஆண்டு முதல் அதிகாரப் போட்டி நிலவுகிறது.
இந்த சண்டையில் இதுவரை, 40,000 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அரேபியர் அல்லா தோர் அதிகம் வசிக்கும் டார்பூர் மாகாணத்தில் உள்ள, ராணுவத்தின் கோட்டையான அல்பஷார் நகரை, 17 மாத முற்றுகைக்குப் பிறகு, துணை ராணுவம் கடந்த மாதம் கைப்பற்றியது. அப்போது தப்பியோட முயன்ற ஆயிரக்கணக்கான பொதுமக்களை ஆர்.எஸ்.எப்., கொடூரமாக கொன்றது.
இதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்தநிலையில், ஆர்.எஸ்.எப்., படையின் இரண்டாவது முக்கியத் தளபதியும், தலைவர் ஹெமெட்டியின், சகோதரருமான அப்தெல் ரஹீம் ஹம்தான் டகலோ மீது ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது.
பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்தல், இன ரீதியான கொலைகள், பாலியல் வன்முறை, பட்டினியை ஆயுதமாகப் பயன்படுத்துதல், மனிதாபிமான உதவிகளைத் தடுத்தல் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் செய்ததற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சொத்து முடக்கம் அமெரிக்கா ஏற்கனவே இவர் மீது தடை விதித்திருந்த நிலையில், இப்போது ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உள்ளது.
இதனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகள், சொத்துகள் முடக்கப்படும்.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின், 27 நாடுகளுக்கும் பயணிக்க முடியாது.
விமான நிலையத்தில் நுழைந்தாலே கைது செய்யப்படுவார்.

