விண்ணிலிருந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க சுனிதா, வில்மோர் திட்டம்
விண்ணிலிருந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க சுனிதா, வில்மோர் திட்டம்
ADDED : செப் 14, 2024 08:21 PM

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்த படி வாக்களிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து, ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் ஜூன் 6-ல் சர்வதேச விண்வெளி சென்ற விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் விண்வெளியில் இருந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.
அதில், வரும் நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க உள்ளோம். இது எங்களின் முக்கியமான கடமையாகும். எனவே தேர்தல் நாளை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றனர். இதில் கமலா ஹாரிஸ், டிரம்ப் இதில் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என தெரிவிக்கவில்லை.
இது குறித்து ஹாரிஸ் கவுண்டி தேர்தல் அதிகாரி என்.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், டெக்சாஸ் மாகணத்தில் ஜான்சன் விண்வெளி நிலையத்திலிருந்து ரகசிய குறியீடுடன் கூடிய பிடிஎப் பார்மட் மூலம் இமெயில் அனுப்பி அங்குள்ளவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
முதன்முதலாக
* கடந்த 1997-ம் ஆண்டு டெக்சாஸ் மாகாண சட்டசபையில் நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளியிலிருந்து வாக்களிக்க வகை செய்யும் மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
* டேவிட் உல்ப் என்ற நாசா விண்வெளி வீரர் விண்வெளி நிலையத்தில் இருந்து வாக்களித்த முதல் அமெரிக்கர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
* 2020 ம் ஆண்டு கேட் ரூபின்ஸ் என்ற நாசா விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது அங்கிருந்து வாக்களித்தார்.

