காரை 'ஸ்விட்ச் ஆப்' செஞ்சுட்டாரு; எலான் மஸ்க் மீது செச்சென் தலைவர் புகார்!
காரை 'ஸ்விட்ச் ஆப்' செஞ்சுட்டாரு; எலான் மஸ்க் மீது செச்சென் தலைவர் புகார்!
ADDED : செப் 21, 2024 05:58 PM

கிராஸ்னி: ''எனது, சைபர் டிரக்கை,டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ரிமோட் மூலம் முடக்கிவிட்டார்,'' என செச்சென்யா தலைவர் ரம்ஜான் கதிரோவ் குற்றம் சாட்டினார்.
ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமானவர் செச்சென்யா குடியரசின் தலைவர் ரம்ஜான் கதிரோவ். தற்போது உக்ரைனில் நடந்து வரும் போரில், ரஷ்யா சார்பில் முன்களத்தில் படைகளுக்கு தலைமை வகிக்கிறார். இவர், டெஸ்லா தயாரிப்பான சைபர் டிரக் கார் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். இந்த காரில், முன் பகுதியில் எதிரிகளை நோக்கி சுடும் வகையில் இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த காரை தனக்கு டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் பரிசாக வழங்கியதாக கதிரோவ் சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு மஸ்க் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தன் சைபர் டிரக்கை எலான் மஸ்க் ரிமோட் மூலம் 'ஸ்விட்ச் ஆப்' செய்து விட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார் கதிரோவ். இதனால் காரை இழுத்து வர வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டதாகவும் கூறியிருக்கிறார். கதிரோவ் அவர் கூறியதாவது:சைபர் டிரக் கார் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் திடீரென்று அதன் செயல்பாடுகள் முடக்கப்பட்டுவிட்டன. எலான் மஸ்க் செய்தது நல்லதல்ல. அவர் இதயத்திலிருந்து விலையுயர்ந்த பரிசுகளை வழங்குகிறார், பின்னர் அவற்றை தொலைவில் இருந்து ஸ்விட்ச் ஆப் செய்து விடுகிறார். ஆனால், நான் பயன்படுத்தும் மற்ற இரண்டு சைபர் டிரக்குகளும் நல்ல முறையில் இயங்குகின்றன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து எலன் மஸ்க் பதிலளிக்கையில், 'ரஷ்ய ராணுவ ஜெனரலுக்கு சைபர் டிரக்கை நன்கொடையாக வழங்கியதாக நினைக்கும் அளவுக்கு நீங்கள் மிகவும் பின்தங்கியவரா, ஆச்சரியமாக இருக்கிறது,'' என்றார்.
முழு மின்சார டெஸ்லா சைபர் டிரக் கார் 2019ல் லாஸ் ஏஞ்சல்ஸில் எலான் மஸ்கால் வெளியிடப்பட்டது, அதன் சில்லறை விலை 90,000 டாலரிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த கார்கள், அமெரிக்காவில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இன்னும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படவில்லை.அப்படி இருக்கையில், சைபர் டிரக் ரஷ்யாவுக்கு எப்படி வந்தது என்ற விவரத்தை கதிரோவ், எலான் மஸ்க் தெரிவித்தால் தான் உண்மை புரியும். எலான் மஸ்கை தர்ம சங்கடத்தில் மாட்டி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் கதிரோவ் இவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.