டமாஸ்கஸ் நகரை கைப்பற்றியது கிளர்ச்சிப்படை; விமானத்தில் தப்பினார் சிரியா அதிபர் ஆசாத்
டமாஸ்கஸ் நகரை கைப்பற்றியது கிளர்ச்சிப்படை; விமானத்தில் தப்பினார் சிரியா அதிபர் ஆசாத்
UPDATED : டிச 08, 2024 10:16 PM
ADDED : டிச 08, 2024 10:02 AM

டமாஸ்கஸ்: சிரியாவில் அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு வந்த இஸ்லாமிய கிளர்ச்சி படையினர், டமாஸ்கஸ் நகரை கைப்பற்றி விட்டோம் என்றும், அதிபர் ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார் என்றும் அறிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில், கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல்- ஆசாத், ரஷ்யா, ஈரான் நாடுகளுடன் இணைந்து செயல்படுவதால், அவரது அரசை ஒழிக்க, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், துருக்கியும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதற்கென, பயங்கரவாதிகளை தூண்டிவிட்டும், ஆயுதங்களை கொடுத்தும் உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.
இதனால் சிரியாவில் 2015ல் தீவிரமாக நடந்த போர், அதிபர் ஆசாத்தின் ஆட்சிக்கு முடிவு கட்டிவிடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சிரியாவுக்கு உதவ ரஷ்ய ராணுவம் நேரடியாக களம் இறங்கியது. ரஷ்யாவின் முப்படைகளும் சிரிய கிளர்ச்சி படைகள் மீது தாக்குதல் தொடங்கின. அதை சமாளிக்க முடியாமல், கிளர்ச்சிப் படையினர் ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிபரை ஆட்சியில் இருந்து அகற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முயற்சி தோல்வியுற்றது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டுக்கு எதிரான போரில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானும் இஸ்ரேல் உடனான மோதல் காரணமாக, படைகளை அனுப்ப முடியாத சூழலில் உள்ளது. சிரியா அதிபருக்கு ஆதரவாக போரிட்டு வந்த ஹிஸ்புல்லா படைகளும் இஸ்ரேல் தாக்குதலில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இத்தகைய சிக்கலான சூழ்நிலையில், அதிபர் ஆசாத்துக்கு எதிராக புதிதாக உருவான கிளர்ச்சிப்படை, துருக்கி ராணுவத்தின் ஆதரவுடன் முழு வீச்சில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதில் சிரியாவின் முக்கிய நகரங்களான அலப்பே, ஹோம்ஸ் ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் கிளர்ச்சிப்படை வசமாகிவிட்டன. இந்த நகரங்களை பாதுகாத்து வந்த சிரியா அரசு படையினர், ஆயுதங்களை கீழே போட்டு தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் கிளர்ச்சிப் படையினர், சிரியா தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றினர். உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான டமாஸ்கஸ், இஸ்லாமியர்கள் மட்டும் இன்றி, கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகியோரும் ஒன்றாக வசித்த நகரம். ஏராளமான புராதன சின்னங்களைக் கொண்டுள்ள நகரம்.
கிளர்ச்சிப் படைகளின் ஒரு பிரிவு டமாஸ்கஸ் நகரை கைப்பற்றி விட்டதாகவும் அறிவித்துள்ளது. தலைநகரில் புகுந்துள்ள கிளர்ச்சிப் படைகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை அதன் தலைவர் அறிவித்துள்ளதாக சி என் என் செய்தி வெளியிட்டுள்ளது. வெற்றியைக் கொண்டாடும் வகையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுதல் கூடாது, பொது சொத்துக்களை சேதம் செய்யக் கூடாது என்று கிளர்ச்சிப்படை தளபதி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, சிரியா அரசு படைகளுக்கு ஆதரவாக, ஈரான், ஹிஸ்புல்லா படைகள் வருமா, ரஷ்ய படைகள் வருமா, அரசு படைகள் யார் கட்டுப்பாட்டில் உள்ளன என்பது பற்றி தெளிவில்லாத சூழல் நிலவுகிறது.
ஓட்டம்
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிப் படை டமாஸ்கஸ் நகரில் நுழைந்துள்ள தகவல் வெளியான நிலையில், அதிபர் ஆசாத் விமானத்தில் தப்பி விட்டார் என்றும், அவர் ரஷ்யா அல்லது ஈரானுக்கு சென்று இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிளர்ச்சியாளர்கள் யார்?
கிளர்ச்சியாளர்களின் தலைவர் அபு முகமது அல் ஜோனி. இவர் 1982ம் ஆண்டு டமாஸ்கஸில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். இவர் அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்; சிரியா உள்நாட்டுப் போரில், அதிபருக்கு எதிராக இஸ்லாமிய படைகளுடன் இணைந்து ஈடுபட்டவர்.
2016ம் ஆண்டு அல்- கொய்தாவுடனான உறவுகளை முறித்து கொண்டதில் இருந்து,அபு முகமது அல் ஜோனி தன்னை மிகவும் பெரிய தலைவர் போல் சூழலை உருவாக்கினார். கிளர்ச்சியாளர்களின் தலைவர் அபு முகமது அல் கூறியதாவது: புரட்சியின் இலக்கு இந்த ஆட்சியை அகற்றுவது தான். இலக்கை அடைய அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என்றார்.
ரஷ்யா, அமரிக்கா சொல்வது என்ன?
மாஸ்கோவின் கூட்டாளியான அதிபர் பஷர் அல்-அசாத்தின் படைகளுக்கு எதிராகப் போராடும் பயங்கரவாத கிளர்ச்சியாளர்களின் கைகளில் சிரியா சிக்குவதை அனுமதிக்கக் கூடாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
'சிரியாவில் நடந்து வரும் மோதலில் அமெரிக்கா தலையிடக்கூடாது' என அமெரிக்கா
அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மக்களின் முடிவு!
சிரியா பிரதமர் முகமது காசி அல்-ஜலாலி கூறியதாவது: மக்கள் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு தலைமையுடனும், ஒத்துழைக்க அரசு தயாராக உள்ளது. அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த நாட்டின் சொத்துக்களை பாதுகாப்பதில் அக்கறை கொண்ட ஒவ்வொரு சிரிய குடிமகனுக்கும் நாங்கள் ஆதரவாக செயல்படுவோம். எந்தவொரு பொதுச் சொத்துக்களுக்கும் தீங்கு விளைவிக்க வேண்டாம் என்று நான் அனைத்து குடிமக்களையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.