'டி-20' உலக கோப்பை இன்று துவக்கம்: சாதிப்பரா இந்திய பெண்கள்
'டி-20' உலக கோப்பை இன்று துவக்கம்: சாதிப்பரா இந்திய பெண்கள்
ADDED : அக் 03, 2024 06:56 AM

சார்ஜா: பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதன் முறையாக கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் பெண்களுக்கான 9வது 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர், வங்கதேசத்தில் நடக்க இருந்தது. அங்கு ஏற்பட்ட கலவரம் காரணமாக, இத்தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு மாற்றப்பட்டது. இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகள் மோதும் இத்தொடர் இன்று சார்ஜாவில் துவங்குகிறது.
இந்தியா எப்படி
இந்திய அணி 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. முன்னதாக 2009, 2010, 2018, 2023 என நான்கு முறை அரையிறுதிக்கு முன்னேறியது. 2020ல் பைனல் வரை சென்றது. இன்னும் ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை.
தவிர 2020 பைனல், 2022 காமன்வெல்த் விளையாட்டு பைனலில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இம்முறையும் இந்தியாவுக்கு சவால் தர காத்திருக்கிறது.
தவிர கடந்த 2018 முதல் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்தியா பங்கேற்கிறது. இதனால் இம்முறை இந்திய அணி சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, இளம் வீராங்கனை ஷபாலி, ஜெமிமா, ரிச்சா உள்ளிட்டோர் பேட்டிங்கில் கைகொடுக்க வேண்டும்.
பவுலிங்கில் ரேணுகா, ஸ்ரேயாங்கா மீது எதிர்பார்ப்பு உள்ளது. தனது முதல் போட்டியில் இந்திய அணி, நாளை நியூசிலாந்தை சந்திக்கிறது.
ஆறு கோப்பை
மொத்தம் நடந்த 8 தொடரில் ஆஸ்திரேலியா 6 முறை கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா என எந்த அணியாக இருந்தாலும் சாய்த்து விடுகிறது. இம்முறை புதிய கேப்டன் அலிசா ஹீலே தலைமையில் எல்லிஸ் பெர்ரி, ஆஷ்லெய், கிரேஸ், டார்சி கூட்டணியுடன் மீண்டும் வீழ்த்த முடியாத அணியாக வலம் வரலாம்.
தேறுமா இங்கிலாந்து
கடந்த 2009 ல் நடந்த முதல் தொடரில் இங்கிலாந்து கோப்பை வென்றது. இதன் பின் 3 முறை பைனலுக்கு முன்னேறிய போதும், சாதிக்க முடியவில்லை. சமீபத்திய தொடர்களில் பாகிஸ்தான், நியூசிலாந்தை வென்றதால் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.
கடந்த முறை (2023) சொந்தமண்ணில் பைனலுக்கு முன்னேறிய தென் ஆப்ரிக்கா, ஆசிய சாம்பியன் இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேச அணிகளும் கோப்பை போட்டியில் குதித்துள்ளன. இன்று நடக்கும் போட்டியில் ஸ்காட்லாந்து-வங்கதேசம், பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன.