'டி-20' உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா வரலாற்று வெற்றி!
'டி-20' உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா வரலாற்று வெற்றி!
UPDATED : ஜூன் 07, 2024 01:50 AM
ADDED : ஜூன் 07, 2024 01:48 AM

டல்லாஸ்: 'டி-20' உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில், பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்திய அமெரிக்க அணி, வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் நடக்கிறது. தனது முதல் லீக் போட்டியில், கனடாவை வீழ்த்திய அமெரிக்க அணி, நேற்று பாகிஸ்தான் அணியுடன் மோதியது. 'டாஸ்' வென்ற அமெரிக்கா 'பீல்டிங்' தேர்வு செய்தது.
அமெரிக்க அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், ஆரம்பம் முதலே, பாகிஸ்தான் அணி திணறியது. ரிஸ்வான் (9), உஸ்மான் கான் (3), பாகர் ஜமான்(11), அசாம் கான்(0) ஏமாற்றினர். கேப்டன் பாபர் ஆஸம் (44), ஷதாப் கான் (40) கைகொடுக்க, 20 ஓவரில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
சவாலான இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணிக்கு, மொனாங் படேல் (50) நல்ல துவக்கம் தந்தார். ஆன்ட்ரிஸ் கோஸ்(35), ஆரோன் ஜோன்ஸ் (36) கைகொடுத்தனர். கடைசி 3 பந்தில், 12 ரன் தேவைப்பட்ட நிலையில், ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க, ஸ்கோர் சமன் ஆனது. இதனையடுத்து போட்டி, சூப்பர் ஓவருக்கு சென்றது.
இதில் சிறப்பாக செயல்பட்ட அமெரிக்க அணி, அமீர் வீசிய 6 பந்தில், 18 ரன் எடுத்தனர். 19 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழந்து 13 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்ற அமெரிக்க அணி, 2 வெற்றிகள் மூலம், ‛குரூப் ஏ' பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.