போருக்கு முற்றுப்புள்ளி வைக்க சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை: உக்ரைனில் ரஷ்யா தொடர் ட்ரோன் தாக்குதல்!
போருக்கு முற்றுப்புள்ளி வைக்க சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை: உக்ரைனில் ரஷ்யா தொடர் ட்ரோன் தாக்குதல்!
ADDED : மார் 24, 2025 04:44 PM

துபாய்: ரஷ்யா - உக்ரைன் இடையே நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் சவுதி அரேபியாவில் நடைபெற்று வருகின்றன.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளாக இந்த போர் நடந்து வருகிறது. இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சு நடத்தி, போரை முடிவுக்கு கொண்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அமெரிக்க மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்புதல் அளித்தது. இது குறித்து ரஷ்யா அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இன்று(மார்ச் 24) உக்ரைனில் அமைதி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் சவுதி அரேபியாவில் நடைபெற்று வருகின்றன. எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருதல் உள்ளிட்டதை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்கள் தொடரும் நிலையில், சவுதியில் அமெரிக்க-ரஷ்ய அதிகாரிகள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்கள் இரவு முழுவதும் தொடர்ந்தன. ரஷ்யா 99 ஆளில்லா விமானங்களை ஏவியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.இரவு உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்தி ட்ரோன் தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.