ADDED : அக் 18, 2025 01:58 AM
நைரோபி: கேரளாவில் இருந்து கென்யா கொண்டு செல்லப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் உடலுக்கு விமான நிலையத்திலேயே ஆயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் 2008 - 13 வரை பிரதமராக இருந்தவர் ரெய்லா ஒடிங்கா, 80. உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒடிங்கா ஆயுர்வேத சிகிச்சை பெற கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கூத்தாட்டுக்குளத்தில் தங்கியிருந்தார்.
அக்.14ம் தேதி மருத்துவமனை வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பால் ஒடிங்கா மரணம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் தனி விமானத்தில் கென்யா கொண்டு செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
பின்னர் அந்நாட்டு பார்லிமென்ட்டில் பொது அஞ்சலிக்காக ரெய்லா உடல் வைக்கப்பட்டது. இறுதிச் சடங்குகள் நாளை மறுதினம் பொன்டோவில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் நடைபெறும். ரெய்லா ஒடிங்கா இறப்பையொட்டி கென்யாவில் ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.